
சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகரித்தப்படியே உள்ளது. ஆண்களை விட பெண்கள், சிறுவர்களின் கூட்டம் அதிகளவில் உள்ளது.
ஆங்காங்கே வெயிலில் உட்கார்ந்து இருக்கும் பெண்கள், முதியோர், கல்லூரி மாணவிகள் ஆகியோருக்கு பழ வகைகள், வாட்டர் பாட்டில்கள், பிஸ்கெட் ஆகியவை கொடுக்கின்றனர். இரவு முழுவதும் பனியில் இருப்பவர்களுக்கு தலைவலி தைலம், வெயிலில் சூடு தாங்குவதற்காக தேங்காய் எண்ணெய் பாக்கெட் ஆகியவையும் கொடுத்து வருகின்றனர்.
மெரினாவில் கூடியுள்ள கூட்டம், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி வந்த கூட்டமாகவே காட்சியளிக்கவில்லை. திருவிழா கூட்டமாகவும், உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்களை போலவும் பாசத்துடனும், பணிவுடனும் நடந்து கொள்கின்றனர்.
யார் தலைமையும் இல்லாமல் நடக்கும் இந்த போராட்டத்தில், தமிழை பற்றியும், தமிழர்களின் பண்பாடு பற்றியும், தமிழர்களின் உணவுகள் குறித்து பேச யார் வந்தாலும், அவர்களிடம் ‘மைக்‘கை கொடுத்து பேச அழைக்கின்றனர்.
இதை பார்க்கும் முதியவர்கள், நாங்கள பல ஆண்டுகளாக அரசியல் கட்சி கூட்டத்தில் கலந்து பார்த்து இருக்கிறோம். பெரியார், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி உள்பட பல தலைவர்களின் கூட்டத்தையும் பார்த்தோம். ஆனால், இன்று மாணவர்களின் இந்த அறிப்போராட்டம் உலகத்தையே திரும்பி பார்க்க செய்துள்ளது என்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது என பல ஆண்டுகளுக்கு முன் சுவாமி விவேகானந்தர் கூறினார். அதில், எங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.
காணரம் எந்நேரமும் செல்போன், வாட்ஸ்அப், பேஸ்புக் என இருக்கின்றனர். ஆனால், அந்த தொழில்நுட்பம்தான், இன்றைய இளைஞர்களின் திறமையையும், உணர்வையும் வெளியே கொண்டு வந்துள்ளது. இவர்களுக்கு வாழ்த்து கூறுவது மட்டுமல்ல, அவர்களின் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவாகவும் இருப்போம் என கூறினர்.
இந்நிலையில், தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக கடற்கரை மணல் பரப்பில் மணல் சிற்பங்களை செய்து வைத்துள்ளனர். அதில் சிறிய குழந்தை படுத்து விளையாடுவது போன்றும், காளையை ஜல்லிக்கட்டு போட்டியில் அடக்குவது போன்றும், மணல் வீடுகளில் காளைகளை வளர்ப்பதுபோன்றும் மிக தத்ரூபமாக செய்துள்ளனர். அதேநேரத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர், கருப்பு சட்டை அணிந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி கட்டினர்.