இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள், பீடி இலைகள் பறிமுதல்…

First Published Aug 12, 2017, 8:25 AM IST
Highlights
smuggling red woods and tobaccos form Tuticorin to srilanka was seized


தூத்துக்குடி

இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடியில் உள்ள கிடங்கில் மூன்று டன்கள் செம்மரக்கட்டைகள் மற்றும் 10 மூட்டைகள் பீடி இலைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்குமாம்.

தூத்துக்குடி மாவட்டம், வ.உ.சி. துறைமுகம் வழியாக அவ்வப்போது செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டு வந்ததால் சுங்கத்துறையினர் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் தருவைகுளத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு செம்மரக்கட்டைகளை கடத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் ஒன்றுக் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறையினர் கடற்கரைக்கு விரைந்துச் சென்றனர்.

இதனையறிந்த கடத்தல்காரர்கள் செம்மரக்கட்டை ஏற்றிவந்த மினிலாரியுடன் கடற்கரைக்குச் செல்லாமல் தப்பிச் சென்று விட்டனர். இதனால் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, புதுக்கோட்டை அருகே தம்பிக்கை மீண்டான் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன்பேரில் சுங்கத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு தலைவர் வருண் ரங்கசாமி, சுங்கத்துறை கண்காணிப்பாளர் செந்தில்நாதன் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர்.

அங்கு லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான கிடங்கில் டிரம்களுக்கு இடையே செம்மரக்கட்டைகள் மற்றும் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. உடனடியாக அதிகாரிகள் அங்கிருந்த 3½ டன் செம்மரக்கட்டைகள் மற்றும் 10 மூடை பீடி இலைகளையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்குமாம்.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வடமாநிலங்களில் இருந்து தூத்துக்குடிக்கு செம்மரக்கட்டை மற்றும் பீடி இலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த செம்மரக்கட்டைகள் இலங்கை வழியாக மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும், பீடி இலைகள் இலங்கைக்கும் படகு மூலம் கடத்துவதற்கான முயற்சி நடந்துள்ளது.

இந்த கடத்தல் முயற்சியில் தூத்துக்குடியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றவர்களை பிடிக்க சுங்கத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

click me!