
கிருஷ்ணகிரி
பென்னாகரத்தில் வேனில் 580 போலி சாராய பாட்டில்கள் கடத்திய ஓட்டுநர் உள்பட அறுவரை காவலாளர்கள் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் இருந்து பென்னாகரத்திற்கு சரக்கு வேனில் சாராயம் கடத்தி வருவதாக தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பென்னாகரம் காவலாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் காவல் ஆய்வாளர் சிவராமன் தலைமையில் காவலாளர்கள் நேற்று முன்தினம் இரவு பென்னாகரத்தில் அம்பேத்கர் சிலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. காவலாளர்களைக் கண்டதும் ஓட்டுநர் வேனை வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால் சந்தேகமடைந்த காவலாளர்கள் அந்த வேனை விரட்டிச் சென்று பிடித்துச் சோதனை நடத்தினர்.
அப்போது அதில் அட்டைப் பெட்டிகளில் 580 சாராய பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வேன் ஓட்டுநர் உள்பட ஆறு பேரை பிடித்து காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது, வேன் ஓட்டுநர் காவேரிப்பட்டணம் குண்டல்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் (27) என்பதும், வேனில் வந்தவர்கள் பென்னாகரம் சுண்ணாம்புகாரத் தெருவை சேர்ந்த தண்டாயுதம் (49), சாணாரப்பட்டியை சேர்ந்த சேட்டு (25), சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (25), கிருஷ்ணாபுரம் முருகன் (33), எஸ்.குள்ளாத்திரம்பட்டி மாதையன் (38) என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் ஆறு பேரும் காவேரிப்பட்டணத்தில் இருந்து சாராய பாட்டில்கள் கடத்தி வந்ததும், இது போலி சாராய பாட்டில்கள் என்பதும் தெரியவந்தது. இந்த சாராய பாட்டில்களை வேலூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் இருந்து வாங்கி விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து சாராய பாட்டில்கள் கடத்திய ஆறு பேரையும் காவலாளர்கள் கைது செய்தனர். மேலும் சரக்கு வேன், 580 சாராய பாட்டில்கள் ஆகியவற்றையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.