
ஆர்.கே.நகர் தொகுதியில், கையேந்தி பவன் முதன் காயலான் கடை வரை 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழங்குவதால், சில்லறை கொடுக்க முடியாமல் வணிகர்கள் தவித்து வருகின்றனர்.
கையில் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்காளர்கள் இருக்கின்றனர் என்று அறிந்து, வாக்காளர் எண்ணிக்கை அந்தந்த வீட்டு சுவர்களிலேயே குறிக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், பணமும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால், அங்குள்ள அனைத்து பகுதி மக்கள் கைகளிலும் பணப்புழக்கம் தாராளமாக உள்ளது.
கையேந்தி பவனில் இட்லி வடகறி சாப்பிடுபவர் முதல், சைக்கிள் பஞ்சர் ஓட்ட வந்தவர் வரை அனைவரும் 500 ரூபாய் அல்லது 2000 ரூபாய் நோட்டையே அனைத்துக்கும் எடுத்து நீட்டுகின்றனர்.
அதனால் 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுக்கள் தேவையான அளவு இல்லாததால், வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்த போது, சில்லறை ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலைதான் தற்போது ஆர்.கே. நகரில் நிலவுகிறது.
வாக்குகளை பணத்திற்கு விற்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் என்னதான் கூப்பாடு போட்டாலும், பறக்கும் படை அமைத்து கண்காணித்தாலும், மக்களின் துணையோடு அத்தனை முயற்சிகளும் தவிடு பொய்யாக்கப்படுகின்றன என்பதே உண்மை நிலை.
யார் வீடு தேடி வந்து பணமும், பரிசு பொருட்களும் வழங்குகிறார்கள் என்பதை சொன்னால், வருவதும் தடைபட்டுவிடும் என்று மக்களே நினைப்பதால், ஓட்டுக்கு பணம் வேண்டாம் என்ற முழக்கம் வெற்று கூச்சலாக மாறி விட்டது.