
கப்பல்கள் மோதியதில் எண்ணெய் கசிவு… மீன்கள் , ஆமைகள் செத்து மிதக்கும் அவலம்…
சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இரண்டு சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதியதில், கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் பரவி வருகிறது.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஈரானில் இருந்து திரவ எரிவாயு ஏற்றி வந்த இங்கிலாந்து கப்பலும், மும்பையில் இருந்து வந்த இந்தியாவை சேர்ந்த எம்.டி.டான் கப்பலும் சனிக்கிழமை காலை எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்ட போதிலும் இரண்டு கப்பல்களும் சிறியளவில் சேதமடைந்தன.
இதனால் கப்பலில் இருந்த டீசல் கசிந்து கடலில் கலந்ததால் எண்ணூர் பகுதியில் கடல் கறுப்பு நிறமாக மாறியுள்ளது.
மேலும், அப்பகுதியில் மீன்கள் மற்றும் ஆமைகள் இறந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கூறுகிறார்கள்.
அதிகளவில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே கப்பல் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் 30 க்கும் மேற்பட்டோர் கடல் நீரில் இருந்து டீசலை பிரித்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் 24 மணி நேரத்தில் அனைத்துப் பணிகளும் முடிந்துவிடும் என்றும், இதனைர் தொடந்து எண்ணூர் கடல் பகுதி சீராகிவிடும் என்று கப்பல் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.