
தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த சண்முகநாதன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இரண்டு முறை கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மிகுந்த சோகத்தில் வெகு நேரமாக முதலமைச்சர் ஸ்டாலின் அங்கேயே உட்கார்ந்து இருந்தார். மேலும், சண்முகநாதன் உடலுக்கு ராசாத்தி அம்மாள், தமிழக மூத்த அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் உள்பட பலரும் நிலையில் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிலையில் சண்முகநாதனின் உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடல் வீட்டில் இருந்து மயானத்துக்கு ஊரவலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த இறுதி ஊரவலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மூத்த அமைச்சர்களுடன் இறுதி ஊரவலத்தில் நடந்தே வந்த முதல்வர் ஸ்டாலின் சண்முகநாதனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.முன்னதாக சண்முகநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமுடன் இரங்கல் தெரிவித்தார். அதில் ''சண்முகநாதன் மறைவுச் செய்தி எனக்குத் தீராத மனத்துயரத்தை ஏற்படுத்திவிட்டது. நேற்று நான் அவரைக் காவேரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தபோது, "அடிக்கடி என்னை எதற்காக வந்து சந்திக்கிறாய்? நீ உனது பணிகளைக் கவனி" என்று உரிமையோடு சொன்னார். அத்தகைய அன்புள்ளத்தை இவ்வளவு சீக்கிரமாக இழப்போம் என்று நான் நினைக்கவில்லை'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
'அண்ணன் என்ற உறவையும் தாண்டி, அவரை எனது உயிராகத்தான் நான் கருதி வந்தேன். எப்போது எந்தக் கூட்டத்தில் நான் பேசினாலும், பேசி முடித்ததும் அவருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன். 'நேரலை பார்த்தீங்களா?' என்று அவரது கருத்தைக் கேட்பேன். அவர் பாராட்டுவார், திருத்தம் சொல்வார், உற்சாகப்படுத்துவார்'' என்று அவருடனுடான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
மேலும் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, அமைச்சர்கள் கேஎன் நேரு, ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, பொன்முடி, செந்தில் பாலாஜி, ரகுபதி , சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா மற்றும் தொழிலதிபர் ஸ்ரீனிவாசன், கவிஞர் வைரமுத்து, சு.ப.வீரபாண்டியன், கி.வீரமணி, துர்கா ஸ்டாலின், சபரீசன், பீட்டர் அல்போன்ஸ், எம்.எல்.ஏ விஜி.ராஜேந்திரன், உள்ளிட்டோர் சண்முக நாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.