சாதி சொல்லி திட்டுனாங்க..பாத் ரூம் கழுவ சொன்னாங்க..ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ்

By Thanalakshmi VFirst Published Dec 22, 2021, 3:09 PM IST
Highlights

இடுவாய் அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியை வற்புறுத்தி கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
 

திருப்பூர் அருகே உள்ள இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியராக இடுவம்பாளையத்தைச் சேர்ந்த கீதா என்பவர், கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். கொரோனா பாதிப்பின் காரணமாக சுழற்சி முறையில் பள்ளிகளில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் தான் மாணவிகள் தலைமை ஆசிரியர் கீதா மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர்.

தலைமை ஆசிரியர் கீதா, மாணவ, மாணவிகளைத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷுக்கு மாணவ - மாணவியர் புகார் அளித்தனர். தொடர்ந்து, சாதிப் பெயரைக் குறிப்பிட்டுப் பேசுவதாகவும், பள்ளியில் உள்ள கழிப்பறையை ஆதிதிராவிடர் குழந்தைகளை வைத்துக் கழுவ வைத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ், இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். 

மேலும், புகார் தொடர்பாகப் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர் கீதாவிடமும் விசாரணை நடத்தினார். இதுக்குறித்து மாணவிகளிடம் கேட்டபோது, நாய் என திட்டுகிறார் என்றும்,  சாதியை வைத்து தரக்குறைவாக பேசுகிறார் என்றும் கழிவறை சுத்தம் செய்ய சொல்கிறார் என்றெல்லாம் மாணவர்கள்  கண்ணீர் மல்க குமுறியிருக்கின்றனர். முதலில் புகார்களை மறுத்த தலைமை ஆசிரியை கீதா, பின்னர் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். இனி இதுபோன்று நடக்காது என்றும் அவர் முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்ததாக கூறப்பட்டது.  

இதற்கிடையே இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளி விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோருக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

click me!