
ஆதம்பாக்கத்தில், இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. ஜம்மு - காஷ்மீர், கத்துவா பகுதியில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டாள். இதேபோன்று குஜராத் மாநிலம் சூரத்திலும் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாள்.
வட மாநிலங்களில் அதிகம் நடந்த இந்த சம்பவம் தற்போது தமிழகத்திலும் நடக்க தொடங்கியுள்ளதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.
வட மாநில இளைஞர் ஒருவர் அந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த இளைஞர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவொற்றியூர் அருகே 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நீங்குவதற்குள் அதேபோன்ற மற்றொரு சம்பவம் நடந்துள்ளது சென்னை வாசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.