
வள்ளியூர் அருகே வழக்கறிஞரை தாக்கிய காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் உட்பட 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பழவூர், மாறன்குளத்தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் என்ற செம்மணி. இவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
கூடன்குளம் அணு உலைக்கு எதிராக அங்குள்ள மீனவமக்கள் போராடி வருகின்றனர். அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகளை செம்மணி நடத்தி வந்தார்.
அவரை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குள் இரவு சென்ற போலீசார் திடீரென அடித்து உதைத்ததில் செம்மணி பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்களை அதிர்ச்சியடைய செய்தது.
இதையடுத்து வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணியை கைது செய்ததை கண்டித்தும், தாக்கிய காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்யவேண்டும் என கோரியும் நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தை 9 மாவட்ட வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸை இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் உதவி ஆய்வாளர் பழனி, சிறப்பு உதவி ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காவலர்கள் ஜோஸ், முகமது சமீர், சாகர், விமல் குமார் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.