செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை தேதி மாற்றம்!

By Manikanda PrabuFirst Published Feb 16, 2024, 12:19 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மூன்று முறை தள்ளுபடி செய்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், சாதாரண ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி குறித்து நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியது. எனவே, ஜாமீன் கிடைக்க அமைச்சர் பதவி இடையூறாக இருக்கக் கூடாது என்பதால், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: அஜய் மக்கான் பரபரப்பு குற்றச்சாட்டு!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது நேற்றும் நேற்று முன் தினமும் நடந்த விசாரணையின் போது, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை வழக்கறிஞர் சுந்தரேசன் ஆகியோர் தங்களது வாதத்தை நிறைவு செய்துள்ளனர். இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் பதில் வாதம் செய்ய வழக்கின் விசாரணையை வருகிற 19ஆம் தேதிக்கு (திங்கள்கிழமை) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உயர்நீதிமன்றம் புதன்கிழமை விசாரணை நடத்துகிறது. ஜாமீன் மனு மீது திங்கள்கிழமைக்கு (பிப்.19ஆம் தேதி) பதில் புதன்கிழமை (பிப்.21ஆம் தேதி) விசாரணை நடத்த செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் முறையீடு செய்தார். முறையீட்டை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், புதன்கிழமை மனு விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

click me!