
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி அனைத்து கல்லூரிமாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து, பல மாவட்டங்களிலும் போராட்டம் வலுத்து வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மற்றும் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று 5வது நாட்களாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் கீதாஞ்சலி என்ற மாணவி, உண்ணாவிரத பந்தலில் திடீர் மயக்கம் அடைந்தார்.
உடனே அவரை மீட்டு, அரசு மருத்துவமனயில் சிகிச்சை அளித்தனர். ஆனால், சுமார் ஒரு மணிநேரம் சிகிச்சை பெற்ற அவர், மீண்டும் உண்ணாவிரத பந்தலுக்கு திரும்பவந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதேபோல் நேற்று மாலை வெற்றி, கார்த்திக் உள்பட சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு குளுகோஸ் வட்டார் ஏற்றப்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்ததும், குளுக்கோஸ் பாட்டிலுடன் மீண்டும் அவர்கள் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து, போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதற்கிடையில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நுழைந்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை கடற்கரை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு செல்ல இருந்த அனைத்து மின்சார ரயில்களையும் மறிந்து, போராட்டம் நடத்தினர். இதனால், ரயில் சேவை பாதித்தது.
தகவலறிந்து ரயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர், செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட மாணவர்களை, ரயில் நிலையத்தில் இருந்து வலுக்காட்டாயமாக வெளியேற்றினர். அங்கிருந்த வெளியே வந்த மாணவர்கள், செங்கல்பட்டு – மதுராந்தகம் சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.