
விருதுநகர்
விருதுநகரில் முறைகேடாக ரேசன் அரிசியை அரைத்து மாவு பாக்கெட் தயாரித்து விற்றுவந்த மாவு ஆலையில் மாறுவேடத்தில் சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தி அந்த ஆலைக்கு சீல் வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், சத்திரப்பட்டி அருகேயுள்ள சட்டிகிணறு கிராமத்தில் ராஜகோபால் என்பவர் மாவு ஆலை நடத்தி வருகிறார்.
இவரது ஆலையில் ரேசன் அரிசியை முறைகேடாக அரைத்து விற்பனைக்காக பாக்கெட் போடப்பட்டு வருகிறது என்று குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் சீனிவாசனுக்கு தகவல் ஒன்று கிடைத்தது.
அந்த தகவலின்பேரில் மாறுவேடத்தில் அவரும், வருவாய் ஆய்வாளர் சுந்தர்ராஜ், உதவியாளர் குணசேகரன் ஆகியோரும் சென்று ஆய்வு நடத்தினர்.
அந்த ஆய்வில், 400 கிலோ ரேசன் பச்சரிசி மாவு, அரைப்பதற்கு தயாராக வைத்திருந்த 50 கிலோ பச்சரிசி, 150 கிலோ புழுங்கல் அரிசி, 10 சாக்குகளில் அரைத்த புழுங்கல் அரிசி மாவு இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் மாவு ஆலையை பூட்டி சீல் வைத்தனர்.
மேலும், அந்த ஆலைக்கு மின் இணைப்புகளை துண்டிக்கவும் மின்வாரிய அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
ரேசன் அரிசிகளை பதுக்கி வைத்து முறைகேடாக அரைத்து விற்பனை செய்துவருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.