
கடலூர்
மழைக் காலத்தில் மின் விபத்துக்களை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை மின்துறை ஆலோசனைகளை அளித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், மின்சார பயன்பாட்டின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கடலூர் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வைப் பொறியாளர் சே.சத்தியநாராயணன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “அறுந்து தரையில் விழுந்து கிடக்கும் மேல்நிலை மின் கம்பிகளை மக்கள் தொடாமல், உடனடியாக தங்களுடைய பகுதி மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
மின் மாற்றிகள், மின் கம்பகங்கள், மின் பகிர்வுப் பெட்டிகளின் ஸ்டே வயர்கள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.
மின் கசிவு தடுப்பான் கருவியை வீடுகளில் பொருத்தி மின்கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம்.
ஈரமான கைகளுடன் சுவிட்சுகளை இயக்கக் கூடாது.
மின் கம்பத்திலோ அல்லது அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டக் கூடாது.
குளிர்சாதனப் பெட்டி, கிரைண்டர் போன்றவற்றிற்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும்.
மின்கம்பத்திலோ, அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களிலோ கொடி, கயிறு உள்ளிட்டவை கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
இடி, மின்னலின்போது மின் கம்பிகள், மரங்கள், உலோக கம்பிவேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்கலாம்.
அவசர நேரங்களில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இருப்பிடம் அமைய வேண்டும்.
இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்து விபத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.
மக்கள், தங்களது பகுதியில் மின்தடை, மின்சார பொருள்கள் சேதாரம் போன்ற புகார்களை தங்களது பகுதிக்கு உள்பட்ட பிரிவு அலுவலர், உதவி செயற்பொறியாளர் ஆகியோரை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், கடலூரில் இயங்கி வரும் 24 மணி நேர விபத்து சேவை மையத்தை தொடர்புகொண்டும் தகவல் தெரிவிக்கலாம்” என்று அதில் கூறியிருந்தார்.