
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாநகராட்சிப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவிகளுக்கு வகுப்பறை இல்லாததால் நாய் செத்துக் கிடந்த கூட்டரங்கில் வகுப்புகள் நடந்ததை அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோயம்புத்தூர் மாவட்டம், ஆர்.எஸ்.புரம் மேற்கு, சம்பந்தம் சாலையில் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு, 700 மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் கணக்குப் பதிவியல் - வணிகவியல் பாடப் பிரிவில் 90 மாணவிகள் உள்ளனர். ஆனால், இவர்களில் 45 மாணவிகள் அமர்வதற்கு மட்டுமே வகுப்பறைகள் உள்ளன. மீதமுள்ள 45 மாணவிகள் அமர்வதற்கு வகுப்பறை இல்லை.
அதனால், இவர்கள் பள்ளியின் கூட்டரங்கில் அமர வைக்கப்பட்டுள்ளனர். கூட்டங்கள் நடைபெறும் நாள்களில் இவர்கள் மரத்தடியிலும், மற்ற பகுதியிலும் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கூட்டரங்கையொட்டிய இடத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் நாய் ஒன்று இறந்துள்ளது. அந்த துர்நாற்றத்திற்கு இடையே அங்கு அமர்ந்து பாடம் பயின்று வந்த மாணவிகள், அக்டோபர் 30-ஆம் தேதி துர்நாற்றம் அதிகமாக வீசியதால் ஒட்டுமொத்தமாக செவ்வாய்க்கிழமை வகுப்பைப் புறக்கணித்துள்ளனர்.
இதனையறிந்த பள்ளித் தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை பள்ளிக்கு நேரில் வரவேண்டும் என்று தகவல் அனுப்பியுள்ளார். இதனையடுத்து, நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவிகளின் பெற்றோர், தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு, தங்களது குழந்தைகளுக்கு வகுப்பறை ஒதுக்காதது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, மாணவர் சேர்க்கையின்போதே இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துவிட்டதாக கூறி பெற்றோரின் ஆத்திரத்தை தூண்டிவிட்டனர்.
இதனால் மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.
பின்னர், பெற்றோரிடம், “நான்கு வகுப்பறைகளைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், பணிகள் முடிவடைந்த பின்னர் மாணவிகளுக்கு வகுப்பறை ஒதுக்கப்படும்” என்றும் தலைமை ஆசிரியர் உறுதியளித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட பெற்றோர், மாணவிகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.