
திருவண்ணாமலை
அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளியை பார்க்க அனுமதிக்காததால் காவலாளியை அடித்து உதைத்து அட்டூழியம் செய்த இளைஞரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை அடுத்த காட்டுக்காநல்லூரைச் சேர்ந்தவர் ரேணுகா (24). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் பணிபுரிந்து வரும் ரேணுகாவின் உறவினர் சதீஷ் (20) அவரை காண மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, அவசர சிகிச்சை பிரிவில் காவலாளியாக இருந்த அமரேசன் என்பவரிடம் சதீஷ், "நான் ரேணுகாவின் உறவினர். அவரைப் பார்க்க உள்ளே செல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அதற்கு அமரேசன், "அவசர சிகிச்சை பிரிவில் ஏற்கனவே நிறைய பேர் உள்ளனர். அவர்கள் வந்த பின்னர் நீங்கள் செல்லலாம்" என்று தெரிவித்துள்ளார். ஆனால், சதீஷ் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சதீஷ் அமரேசனை சரமாரியாக அடித்து, உதைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து அமரேசன் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து சதீசை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.