
திருவள்ளூர்
திருவள்ளூரில், விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் 10 அடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், வியாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமரவேலுவின் மகன் டில்லிபாபு (4). இந்த சிறுவன் சனிக்கிழமை மதியம் தன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
மாலை 6 மணி ஆகியும் டில்லிபாபு வீட்டிற்கு வராததால், அவனது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சில நாள்கள் முன்பு அதே பகுதியில் வசிக்கும் பாலாஜி (28) சுகாதார வளாகம் கட்டுவதற்காக, பத்து அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி தொட்டி கட்டியிருந்தார்.
அந்த தொட்டியில் உள்ள தண்ணீரில் காணாமல்போன டில்லிபாபு தவறி விழுந்து இறந்து கிடக்கிறார் என்ற தகவல் டில்லிபாபுவின் பெற்றொருக்கு கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற பெற்றோர் கதறி அழுதனர்.
அதைத் தொடர்ந்து, சிறுவனின் உடலை மீட்டு, திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவாலங்காடு காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் 10 அடி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது.