யானைகளின் வழித் தடத்தில் கட்டப்பட்ட 27 சொகுசு விடுதிகளுக்கு 'சீல்' - நீலகிரி ஆட்சியர் அதிரடி...

First Published Aug 10, 2018, 11:43 AM IST
Highlights

முதுமலை யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த 27 சொகுசு விடுதிகளுக்கு நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா 'சீல்' வைத்து அதிரடி காட்டினார். சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சொகுசு விடுதிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 

நீலகிரி மாவட்டம், முதுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் செல்லும் வழியில் அனுமதியின்றி சொகுசு விடுதிகள், உணவகங்கள் போன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் யானைகள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் குடியிருப்புகள் நுழைந்துவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சிறுத்தைப் புலிகளும் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் உலா வருவதை அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவாகி இருந்தது. இது குறித்த தகவல் பரவி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. 

கடந்த 2009-ஆம் ஆண்டு யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இரண்டு வருடங்கள் விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு 2011-ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.

பத்து வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி, "யானைகள் வழித் தடத்தில் இருக்கும் தனியார் தங்கும் விடுதிகளை கணக்கெடுத்து அறிக்கையை ஆகஸ்டு 8-ஆம் தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீலகிரி ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதன்படி, அந்த அறிக்கையும் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்த நிலையில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "யானைகள் வழித்தடத்தில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு 'சீல்' வைக்க வேண்டும் என்றும் இந்த வழித்தடத்தில் புதிய கட்டுமானப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நீலகிரி ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

அதன்படி, முதுமலை யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த 27 சொகுசு விடுதிகளுக்கு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா 'சீல்' வைத்து அதிரடி காட்டினார். அதுமட்டுமின்றி,  சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 39 சொகுசு விடுதிகள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

click me!