
கடல் அலையின் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு கடல்நீர் புகுந்துள்ளது. பாதிக்கபட்டோர் வேறிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடலில் ஏற்பட்டுள்ள தொலைதூர சலனங்கள் மற்றும் இயற்கை மாற்றத்தால் கடல் சீற்றத்துடன் காணப்படும என்று நேற்று முன்தினம் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதாவது நேற்றும் இன்றும் கடல் அலையின் சீற்றம் அதிகரிக்கும் என்று தெரிவித்திருந்தார்.
எனவே, மீனவர்களும், பொதுமக்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த எச்சரிக்கையை அடுத்து, மீனவர்களும், படகு மீனவர்களும்
கடலுக்குள் செல்லவில்லை. ராமேஸ்வரம் பகுதி தனுஷ்கோடிக்குச் செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், அக்னிதீர்த்தம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் பக்தர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. பலத்த காற்று, கடல் சீற்றத்தால் 11 அடி உயரத்துக்கு அலைகள் எழும் என்றும் மீனவர்களும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் மார்த்தாண்டம் அருகே கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலையின் சீற்றத்தால், கடல் நீர் கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் புகுந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
18 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ராட்சத அலைகள் தாக்கியதில் 150 வீடுகள் சேதம்டைந்துள்ளன. மண்டைக்காடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர்களும் ராட்சத அலைகளால் சேதமடைந்தன.
தூண்டில் வளைவு உள்ளிட்டவைகள் அமைக்க வேண்டுமென கன்னியாகுமரி மக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், கடல்நீர் உட்புகுந்ததால், தூண்டில் வளைவை அமைக்க வேண்டும் என்று தற்போது கன்னியாகுமரி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.