
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் 2–வது நாளாக கடல் சீற்றத்துடனும், இராட்சத அலைகள் எழுந்து ஆவேசத்துடனும் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க காவலாளர்கள் தடை விதித்தனர்.
இலங்கை அருகே இந்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், புகழ்பெற்ற சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் நேற்று 2–வது நாளாக கடல் சீற்றமாக காணப்பட்டது.
காலையில் இருந்தே மாவட்டம் முழுவதும் மழை மேகங்கள் சூழ்ந்திருந்தது. அவ்வப்போது மழைத்தூரல் பெய்ததது. காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாக இருந்தது.
இராட்சத அலைகள் எழுந்து ஆவேசத்துடன் கரைகளில் உள்ள பாறைகளில் மோதி சிதறியது. இதனைக் கண்ட சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா காவலாளர்கள் தடை விதித்தனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு, காற்றழுத்த தாழ்வு நிலை ஆகிய காரணங்களால் முக்கடல் சங்கமம் கடற்கரையில் உள்ள நடைபாதை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.
இருந்தும், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து வழக்கம்போல் தொடங்கி இடைவேளையின்றி மாலை 4 மணிவரை நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.