கள்ளக்காதலனை ஏவிவிட்டு கணவனை கொலை செய்த மனைவி உள்பட ஆறுபேர் கைது...

First Published Mar 14, 2018, 9:30 AM IST
Highlights
Six people arrested for killing husband


காஞ்சிபுரம்

ஒன்றரை வருட கள்ளக்காதலலை விட்டுவிடுமாறு கணவன் கண்டித்ததால் கள்ளக்காதலனை ஏவிவிட்டு கணவனை வெட்டிக் கொன்ற மனைவி உள்பட ஆறு பேரை தனிப்படை காவலாளர்கள் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த ஆயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் செல்வம் (37). மினி லாரி ஓட்டுநர். இவர் கடந்த 11-ஆம் தேதி வெங்கம்பாக்கத்தையடுத்த பூந்தண்டலம் பாலம் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

இதனிடையே அவரது உறவினர்கள் மற்றும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்புராஜுக்கு உத்தரவிட்டார். 

சதுரங்கப்பட்டினம் காவல் ஆய்வாளர் ஐயனாரப்பன் கேளம்பாக்கம் ஆய்வாளர் பாண்டி, தாழம்பூர் ஆய்வாளர் ராஜாங்கம் ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர் சுசீலா உள்பட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு செல்வத்தை கொலை செய்தவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

பின்னர் காவலாளர்கள் நடத்திய விசாரணையில், செல்வத்தின் மனைவி சந்திரமதிக்கும் (27), அதே கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (28) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாகவும், இதை செல்வம் பலமுறை கண்டித்ததாகவும் தெரிகிறது. 

இது தொடர்பாக கடந்த வாரம் செல்வத்துக்கும், சந்திரமதிக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து சந்திரமதி கள்ளக்காதலன் ஆனந்தனிடம் கூறினார். இதனைத் தொடர்ந்து ஆனந்தன் கடந்த 11-ஆம் தேதி இரவு செல்வத்திடம் மாடு ஏற்றி செல்ல கல்பாக்கத்தை அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்திற்கு வரும்படி கூறியுள்ளார்.

இதனை நம்பி செல்வம் தனது மினி லாரியில் வெங்கம்பாக்கம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றார். ஆனந்தன் தனது நண்பர்கள் ஸ்ரீதர் (30), கார்த்திக் (22), சுரேஷ் (35), பிரகாஷ் (20) ஆகியோர் பூந்தண்டலம் பாலம் அருகே மினி லாரியை மடக்கி செல்வத்தை கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

செல்வம் அவர்களைத் தடுத்தபோது, அவரது கட்டை விரல் துண்டானது. அதனைத் தொடர்ந்து செல்வத்தை தலை மற்றும் கழுத்தில் வெட்டிவிட்டு அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் சந்திரமதியும், பிரகாசும் சென்னைக்கு தப்பி செல்வதற்காக வெங்கப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தனர். தனிப்படை காவலாளர்கள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மற்றவர்களும் தப்பி வெளியூர் செல்வதற்காக முள்தோப்பில் பதுங்கி இருந்தனர். அவர்களையும் தனிப்படை காவலாளர்கள் கைது செய்தனர். 

click me!