Tamilnadu Rain : கனமழை எதிரொலி… 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

By Narendran SFirst Published Nov 29, 2021, 8:01 PM IST
Highlights

#TamilnaduRain | தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் இடுப்பளவு நீர் தேங்கியுள்ளதால் அங்குள்ள மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு கடலூர் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் 17 செ.மீ, சிவலோகம் (கன்னியாகுமரி) 16 செ.மீ, களியல் (கன்னியாகுமரி) 14 செ.மீ, சிற்றாறு (கன்னியாகுமரி) 13 செ.மீ, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 12 செ.மீ, புதுச்சேரி, தக்கலை (கன்னியாகுமரி), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 11 செ.மீ, குழித்துறை (கன்னியாகுமரி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வல்லம் (விழுப்புரம்), குடிதாங்கி (கடலூர்), வானமாதேவி (கடலூர்) தலா 10 செ.மீ, திருத்தணி (திருவள்ளூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பாபநாசம் (திருநெல்வேலி), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), சோழவரம் (திருவள்ளூர்), வேப்பூர் (கடலூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), தலா 9 செ.மீ மழை பெய்துள்ளது. அதேபோல், மணிமுத்தாறு (திருநெல்வேலி), காரைக்கால் (காரைக்கால்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), வாலாஜா (இராணிப்பேட்டை), பூண்டி (திருவள்ளூர்), நாகப்பட்டினம் , மணல்மேடு (மயிலாடுதுறை), காட்டுமயிலூர் (கடலூர்), கொத்தவாச்சேரி (கடலூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 8 செ.மீ, உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), நெய்வேலி (கடலூர்) , மயிலாடுதுறை, புவனகிரி (கடலூர்), சூரலக்கோடு (கன்னியாகுமரி), சென்னை விமான நிலையம், கலவை (ராணிப்பேட்டை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), செங்கல்பட்டு, பண்ருட்டி (கடலூர்), பொன்னேரி (திருவள்ளூர்), அண்ணாமலை நகர் (கடலூர்) தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே  தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கனமழை காரணமாக, நாளை தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதேபோல் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

click me!