5 நிமிடம் தாமதம்.. வாத்து போல நடக்கும் தண்டனை!! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்.. உடற்கல்வி ஆசிரியர் கைது

First Published Jan 18, 2018, 11:16 AM IST
Highlights
school student dead in chennai and pet teacher arrested


பெரம்பூர் டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளியில், 5 நிமிடம் தாமதமாக வந்த 10 ஆம் வகுப்பு மாணவனை வாத்துபோல நடக்க வைத்து தண்டனை வழங்கியதால், அவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவனை வாத்து போல நடக்க வைத்த உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் திரு.வி.க குடியிருப்பை சேர்ந்த முரளி என்பவரதுமகன் நரேந்திரன். இவர் பிருந்தா திரையரங்கம் அருகே உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்தார். நேற்று(புதன்கிழமை) வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவர், இறைவணக்க கூட்டத்திற்கு பின்னர், மயங்கிவிழுந்துள்ளார். அவரை இரண்டு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றும் காப்பாற்ற முடியவில்லை. உயிரிழந்துவிட்டார் என பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர், காலையில் சிரித்தபடி பள்ளிக்கு சென்ற மகன், சடலமாக கிடப்பதை கண்டு கதறி அழுதனர். இயற்கையாகத்தான் மயங்கி விழுந்து நரேந்திரன் உயிரிழந்ததாக கூறியதை அடுத்து, உடற்கூறாய்விற்கு பின்னர், நரேந்திரனின் உடலை பெற்றோர் பெற்று சென்றனர். 

ஆனால், பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு திரும்பிய நரேந்திரனின் நண்பர்கள் தெரிவித்த தகவலைக் கேட்டு பெற்றோர் அதிர்ந்தனர். காலையில் 5 நிமிடம் தாமதமாக பள்ளிக்கு வந்த நரேந்திரன் உள்ளிட்ட 6 மாணவர்களை மண்டியிட்டு வாத்து போல பள்ளி மைதானத்தை மூன்று முறை சுற்றிவருமாறு உடற்கல்வி ஆசிரியர் தண்டனை கொடுத்துள்ளார். அவர்களில் 3 பேர், மூன்று முறை சுற்றிவிட்டு வகுப்பிற்கு சென்றுவிட, நரேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் மயங்கியுள்ளனர். மற்ற இருவருக்கும் முதலுதவி அளித்து வகுப்பில் அமரவைத்துவிட்டனர். ஆனால், மண்டியிட்டு நடந்ததில் மயக்கமடைந்த நரேந்திரன் மட்டும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை நரேந்திரனின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த நரேந்திரனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மற்ற மாணவர்களின் பெற்றோர், பள்ளியையும் திரு.வி.க.நகர் காவல்நிலையத்தையும் முற்றுகையிட்டனர். இயற்கையாக மயங்கி விழுந்ததாக பொய் கூறிய பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.

பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த காவல்துறையினர் சமாளித்ததால் காவல்நிலையத்தையும் மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டனர். உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து, மாணவர்களுக்கு மண்டியிட்டு நடக்கும் தண்டனை அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

5 நிமிடம் தாமதமாக வந்ததற்கு உடலளவில் காயப்படுத்தி, மாணவரின் இறப்புக்கு உடற்கல்வி ஆசிரியரும் பள்ளி நிர்வாகமும் காரணமாக இருந்துள்ளது. இச்சம்பவம் மாணவர்களின் பெற்றோரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!