கனமழை தொடர்வதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவெடுப்பார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் மழைக்காலத்தை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் 930 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்பதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
undefined
சென்னை மாநகரின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
உடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், மா.சுப்பிரமணியன் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேஷ் லக்கானி மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளர் அமுதா மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் இருந்தனர்.
சென்னை தாங்கவே தாங்காது; இடியை இறக்கிய தமிழ்நாடு வெதர்மேன்!!
முன்னதாக, மாநகராட்சி அலுவகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுபாடு மற்றும் கட்டுபாடு மையத்தை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி, மாநில அவசரகால செயல்பாடு மையத்தின் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னையில் 24 மணி நேரத்தில் 46.48 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.1 சென்டிமீட்டர் மழையும் தேனாம்பேட்டையில் 6.1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 8 மரங்கள் காற்றின் வேகம் காரணமாக முறிந்து விழுந்துள்ளது. 1000 நபர்கள் தங்கும் வகையில் 300 எண்ணிக்கையிலான நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 35 சமையல் அறை மையங்கள் தயார்நிலையில் உள்ளன. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 20 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை.
கணேசபுரம், பெரம்பூர் சுரங்கப்பாதைகள் மழைநீர் தேக்கம் காரணமாக மூடப்பட்டுள்ளது. அங்கும் தேங்கி உள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 300க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. 24 மணி நேரத்தில் சென்னை முழுவதும் எங்கேயும் மின்தடை என்பது இல்லை.
கடந்த 12 மணி நேரத்தில் 1500 அழைப்புகள் சென்னை மாநகராட்சியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்துள்ளது. இதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார்" என்று தெரிவித்தார்.
"சென்னையில் நிவாரண பணிக்காக 89 படகுகள், பிற மாவட்டங்களில் 130 படகுகள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளது. 931 மையங்கள் நிவாரண பணிக்காக தயார் நிலையில் உள்ளது. சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மழை வெள்ள பாதிப்பு கண்காணிக்க நோடல் ஆபீஸர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மழை வெள்ள பாதிப்பை உணர்ந்து 100 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் சுகாதார பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் உள்ளனர். தேவைப்படும் போது அவர்கள் சென்னை அழைத்து வருவார்கள்" எனவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யும் என்பதால் முன்கூட்டியே தேசிய பேரிடமிருந்து படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தற்போது வரை முகாம்களில் தங்கவைக்கக்கூடிய அளவுக்கு மழை பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
பழைய மொபைல் சும்மா இருக்கா? அதை நன்கொடையாக வழங்கலாமே!