திமுகவை வீழ்த்த பிளான் ரெடி.. தீய சக்தியை வேரறுப்பேன்.. சபதம் எடுத்த சசிகலா!

Published : Jan 21, 2026, 05:24 PM IST
Sasikala vs MK Stalin

சுருக்கம்

யார் யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எனது நிலைப்பாடு இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது தான் என்று சசிகலா கூறியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்காக புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன். தீய சக்தியை வேரறுப்பேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

வைத்திலிங்கம் செய்தது தவறு

இதனை அவரோடு இத்தனை காலம் உடன்பயணித்தவர்கள், ஏன் அவரது தொகுதியை சார்ந்த பொதுமக்கள் கூட இந்த முடிவைஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது ஒரு சிலரின் சுயநலத்தால் நடப்பதே தவிர வேறொன்றுமில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் “இன்னும் 100ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்தார்கள்.

மன்னிக்க முடியாத செயல்

ஆனால், இன்றைக்குதங்களை தாங்களே தலைவர்களாக அறிவித்துக்கொண்டவர்கள் இயக்கத்தை காப்பாற்ற முடியாமல் தோல்வியடைந்துஇருப்பதைத்தான் இது காட்டுகிறது. இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத செயலாகும். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான் நிறைவேறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நுனிக்கிளையில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுகின்றனர்

கழகத்தை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது போன்ற செயல்கள் நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரத்திற்கு கேடாக அமைந்து விடும். அம்மா அவர்களது ஆட்சி காலங்களில் மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள் தான் நம்மை தேடி வந்து இருக்கிறார்கள். அவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் பயணித்து வெற்றிகளை பெற்று இருக்கிறோம்.

அதிமுகவில் நேர்மாறாக நடக்கிறது

ஆனால் இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நடப்பது ஏன் என்று அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும். நம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்களே தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக்கட்சிகளுக்கு செல்கின்ற ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் காலங்களில் திமுகவினரின் சித்து விளையாட்டுகள், முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து இந்த கட்சி அழிந்துவிடாமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராடி காப்பாற்றியிருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நடக்கின்றவைகளை பார்க்கும்பொழுது நம் இருபெரும் தலைவர்கள் இந்த கட்சிக்காக பட்ட துன்பங்கள் தான் நினைவிற்கு வருகிறது.

தீயசக்தி திமுகவை எதிர்ப்பேன்

இன்றைக்கு யார் யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எனது நிலைப்பாடு ஒரே நிலைப்பாடுதான். எனது இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது. இந்த மக்கள் விரோத மன்னர் ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றுவது தவிர வேறொன்றுமில்லை. எனது வாழ்நாள் முழுவதும்தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன், ஓய்ந்துவிடமாட்டேன் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவை வீழ்த்த புதிய வியூகங்கள்

புரட்சித்தலைவர் அவர்கள் திமுக ஒரு தீயசக்தி என்பதை மக்களிடத்தில் தோலுரித்து காட்டிய அதே கொள்கைப்பிடிப்பினையும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சுயமரியாதையினையும் தொடர்ந்து கடைபிடித்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன். ஒன்றிணைந்து களம் காண்போம், வென்று காட்டுவோம்'' என்று கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பிரதமர் மோடி 100 தடவை தமிழகம் வந்தாலும் நோ யூஸ்.. NDA மூழ்கும் கப்பல்.. போட்டுத் தாக்கிய காங்கிரஸ்!
பாஜக வழிக்கு வந்த டிடிவி.. பிடி கொடுக்காத பிரேமலதா.. தேமுதிக யாருடன் கூட்டணி? அதிரடி அறிவிப்பு!