
அந்நிய செலாவணி வழக்கில், சசிகலா காணொலி காட்சி மூலம் எழும்பூர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக ஆஜரானார். அப்போது, தன் மீதான குற்றச்சாட்டுகளை சசிகலா மறுத்துள்ளார்.
பெங்களூர் சிறையில் இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சுதாகரன் மற்றும் டி.டி.வி.தினகரன், பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை சார்பில் அன்னிய செலாவணி மோசடி வழக்கு நடைபெற்று வருகின்றன.
பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் அஜராக அனுமதிக்குமாறும், கேள்விகளை முன் கூட்டியே தனக்கு அளிக்குமாறும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சசிகலா வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி அனுமதி அளித்தார்.
இந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி, சசிகலா பெங்களூர் சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலம் எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையில் ஆஜரானார். அப்போது, சசிகலா தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். பின்னர், விசாரணையை ஜுலை 1 ஆம் தேதி (இன்று) நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பரப்பரன அக்ரஹாரத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் சசிகலா 2-வது முறையாக விசாரணையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளை சசிகலா மறுத்துள்ளார். இதனை அடுத்து, இந்த வழக்கை வரும் 7 ஆம் தேதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.