சர்க்கார் பட பாணியில் பெரம்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் 49பி தேர்தல் விதிப்படி வாலட் வாக்கு செலுத்தியுள்ளார். தனது வாக்கை வேறொரு நபர் செலுத்திய நிலையில் தனக்கான ஆதாரத்தை நிரூபித்து வாக்கு செலுத்தியுள்ளார்.
கள்ள வாக்குப்பதிவு
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையாற்ற வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் விஜய்யின் சரக்கார் படத்தில் நடிகர் விஜய்யின் ஓட்டை வேறொருவர் போட்டு விடுவார். இதன் காரணமாக பிரச்சனை செய்து 49பி பிரவின் படி தனது வாக்கினை செலுத்துவார். இந்த காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே போன்று நிஜத்திலும் நடந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வாக்குச்சாவடி அதிகாரியிடம் முறையீடு
சென்னை பெரம்பூரில் உள்ள சிஎஸ்ஐ துவக்கப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் தீட்டி தோட்டத்தை சேர்ந்த முகமது ரபி என்ற நபர் தனது வாக்கினை செலுத்த வந்துள்ளார், அப்போது அவருக்கு முன்பாகவே அவருடைய வாக்கை வேறு யாரோ ஒருவர் செலுத்தி இருப்பதாக தெரிவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால் முகமது ரபியின் முறையீட்டை தேர்தல் அதிகாரிகள் கொண்டு கொள்ளவில்லை. இதனால் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியே வந்தவர், அங்கிருந்த வாக்காளர்கள் மற்றும் வெளியில் இருந்தவர்களிடம் முறையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தனது கோரிக்கையை போலீசாரிடம் தெரிவித்த நிலையில்,
சர்க்கார் பட பாணியில் வாக்குப்பதிவு
காவல்துறையினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பேசி 49 பி பிரிவின்படி அவருக்கு ஓட்டு போடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்களிடம் தனக்கான ஆதாரத்துடன் முறையிட்டதன் பிறகு 49 பி பிரிவின்படி அவருடைய வாக்கை செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 49பி விதியின் படி -உங்கள் வாக்கை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதனை நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் தெரிவுபடுத்தி, அவரின் கேள்விகளுக்குத் தக்க பதிலளித்து, வாக்குச் சீட்டு மூலம் உங்கள் வாக்கைப் பதிவு செய்யலாம். அதற்கு முன் படிவம் 17B-யில் உங்கள் பெயரைப் பதிவிட வேண்டும் . மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது இரண்டு வேட்பாளர்கள் ஒரே வாக்குகளை பெற்றால்,. இந்த 49பி வாக்குகளை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.