
இது சபரிமலை சீசன். கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி மாலை அணிந்து, சபரிமலை ஐயப்பனைக் காண ஒரு மண்டலம் விரதம் இருந்து பலரும் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
சபரிமலைக்குச் செல்ல தமிழகத்தில் இருந்து நான்கு பாதைகள் முக்கியமானவையாகத் திகழ்கின்றன. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ளவர்கள் கோவை வழியையும், மத்திய தமிழகம், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தேனி, கம்பம், குமுளி வழியையும், தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் செங்கோட்டை மற்றும் மார்த்தாண்டம் வழிகளையும் தேர்ந்தெடுத்துச் செல்கின்றனர்.
பொதுவாக, நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியில் செல்பவர்கள் குற்றாலத்தில் குளியல் போட்டுவிட்டு, ஐயப்பனின் ஐந்து படை வீடுகளை தரிசித்துவிட்டுச் செல்கின்றனர். செங்கோட்டையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இருக்கும் அச்சங்கோவில் தர்ம சாஸ்தா, பின்னர் சபரிமலை செல்லும் புனலூர் சாலையில் உள்ள ஆரியங்காவு, குழத்துப்புழை, பின் பம்பை சென்று அதன் பின் மலை ஏறுவர்.
அடுத்து பெருவழிப் பாதை என்று கூறப்படும் தேனி மாவட்டம் கம்பம், குமுளி வழியே கடந்து சென்று சபரிமலை செல்வார்கள். இந்தப் பாதை, குறுகிய மலைப் பாதை என்பதுடன், அதிக போக்குவரத்து நெரிசலும் கொண்டது. ஆனால், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து செல்பவர்கள் பெரும்பாலும் இந்தப் பாதையையே தேர்ந்தெடுத்து செல்கின்றனர்.
பயண நேரத்தைக் குறைப்பதற்காக தேனி, கம்பம் வழியை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இதனால், டிராவல்ஸ் வேன், பஸ் என தனிப்பட்ட வாகனங்களை அமர்த்திக் கொண்டு செல்பவர்கள் அதிகம் வருவதால், இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களால் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்காகவும், பயணிகள் சிரமத்தைத் தவிர்ப்பதற்காகவும், போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனர் தேனி மாவட்ட போலீஸார்.
இதன்படி, நேற்று முதல் பிற மாவட்டங்களிலிருந்து தேனி வழியாக சபரிமலைக்குச் செல்லும் வாகனங்கள் கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக கட்டப்பனை, ஏலப்பாறை, குட்டிக்கானம், முண்டக்கயம், எரிமேலி வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
சபரிமலையிலிருந்து தமிழகத்திற்கு திரும்பும் வாகனங்கள் முண்டக்கயம், குட்டிக்கானம், வண்டிப்பெரியாறு, குமுளி, கம்பம் வழியாக தேனி பகுதிக்கு செல்லுமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை அனுசரித்து, சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் முன்னதாகவே திட்டமிட்டுக் கொண்டு இந்தப் பாதையில் செல்வது நல்லது.