45 ஆண்டுகளாக மண் சாலையை பயன்படுத்தும் கிராம மக்கள்…

First Published Dec 29, 2016, 9:25 AM IST
Highlights


பெரும்பாறை அருகே 45 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் மண் சாலையை சீரமைத்துத் தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியரின் காரை முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே சோலைக்காடு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக புல்லா வெளியில் இருந்து சோலைக்காடு வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் சாலை உள்ளது.

இந்த சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் குண்டும், குழியுமாக மோசமாக காணப்படுகிறது. பொதுமக்கள் நடந்து செல்லகூட தகுதியற்ற நிலையில் இந்த சாலை இருக்கிறது. மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறி இன்னும் மோசமாகி விடுகிறது.

அதேபோல் புலையன்வளைவு கிராமத்தில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆதிவாசிகளின் குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து புல்லாவெளி வரை சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரம் வரை சாலை வசதி இல்லை.

இப்பகுதியில் இருந்து பள்ளிக்கூடம் செல்லும் மாணவ, மாணவிகள் பெரும்பாறைக்கும், சோலைக்காட்டுக்கும் செல்ல வேண்டும். மேலும் பெரும்பாறை, அய்யம்பாளையம், போன்ற பகுதிகளில் உள்ள விடுதியில் தங்கியும் படிக்கின்றனர்.

இப்பகுதியில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகளை டோலி கட்டி கரடு, முரடான பாதை வழியாக தூக்கி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. அதேபோல் அவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் ஆறு கி.மீ. தூரத்தில் உள்ள சோலைக் காட்டுக்கு தான் செல்ல வேண்டும்.

கடந்த 45 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த மண்சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, அந்த சாலையை சீரமைத்து தார்சாலை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் ஆட்சியரிடம் ஏற்கனவே மனு கொடுத்திருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று பெரும்பாறையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அதிகாரிகளுடன் காரில் சென்றார்.

இதை அறிந்த புல்லாவெளி, புலையன்வளைவு கிராம மக்கள் தங்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆட்சியர் காரை முற்றுகையிட்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

இதுகுறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

 

click me!