
நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்கள்…போலீஸ் கெடுபிடி
புத்தாண்டை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கொண்டாட்டங்களின்போது, கடைபிடிக்கவேண்டிய, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பொழுது போக்கு இடங்களில் புத்தாண்டு தினத்தைக் கொண்டாட அனுமதி கோரி விண்ணப்பிப்போருக்கு வரும் 31ம் தேதி மாலை 6 முதல் நள்ளிரவு ஒரு மணி வரை அனுமதி வழங்கப்படும் என்றும், நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் உணவு வழங்குதல் மற்றும் மதுபான விற்பனையை நள்ளிரவு ஒரு மணியுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும் - நுழைவாயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவேண்டும் - நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ தற்காலிக மேடைகள் அமைத்தல் கூடாது - தற்காலிக மேடையின் ஸ்திரத் தன்மையை உறுதிசெய்ய தகுதிச் சான்றிதழ் பெறப்படவேண்டும் - நீச்சல் குளத்திற்கு செல்லும் வழிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புத் தடை ஏற்படுத்தவேண்டும் - கேளிக்கை நிகழ்ச்சிகள் மிகுந்த நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும் நடத்துவதற்கு நிர்வாகத்தினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபடக்கூடாது - இருசக்கர வாகனங்களில் 2 பேருக்குமேல் அமர்ந்து செல்லக்கூடாது - இருசக்கர வாகனம் மற்றும் கார்களை அதிவேகமாக ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசுகள் வெடித்தல் கூடாது - கேலி கிண்டலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, பெருநகர காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. உயர் அதிகாரிகள், அலுவலர்கள், காவலர்கள் ரோந்து மற்றும் வாகன சோதனைக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, கடற்கரை, வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.