ஆட்சியரகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறையினர் சாலை மறியல்; சும்மா விடுமா போலீஸ்? 135 பேர் கைது...

First Published Jul 10, 2018, 8:11 AM IST
Highlights
Rural Development officers held road block protest front of collector office


கன்னியாகுமரி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 135 ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை காவலாளர்கள் கைது செய்தனர்.

26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை கடந்த 3-ஆம் தேதி தொடங்கினர்.

அதன்படி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க கன்னியாகுமரி மாவட்ட கிளை சார்பிலும் இந்தப் போராட்டம் 3-ஆம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

"ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். 

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். 

இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும். 

பல மாவட்டங்களில் ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். 

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 

கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.60-ஐ ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.

ஊராட்சி ஒன்றியங்களின் புதிய கணினி உதவியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். 

முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். 

சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 

ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பு ரூ.5 இலட்சமாக உயர்த்த வேண்டும். 

வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஊராட்சி செயலாளராக பணியாற்றி 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் முந்தைய பணி காலத்தில் 50% பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 

பொறியாளர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். 

கோட்ட வளர்ச்சி அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும்

தனி நபர் இல்ல கழிவறைக்கு வழங்கும் மானியத்தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்" உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்க அடுத்த கட்ட போராட்டமாக நேற்று ஆட்சியரகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறையினர் சாலை மறியல் போராட்டம் செய்வோம் என்று அறிவித்திருந்தனர். 

அதன்படி நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக ஏராளமான அலுவலர்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரகம் முன்பு திரண்டனர். அதன்பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், அவர்கள் அனைவரும் ஆட்சியரகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதற்கு மாவட்ட தலைவர் அன்பு தலைமை வகித்தார்.  மாநிலத் துணைத் தலைவர் சுமதி, செயலாளர் ராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பகவதியப்பபிள்ளை, செயலாளர் லீடன்ஸ்டோன் உள்பட பலர் பங்கேற்றனர். 

மறியல் போராட்டம் நடக்க இருப்பதால் அங்கு துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

அதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட  54 பெண்கள்உள்பட மொத்தம் 135 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை அனைவரையும் காவல் வாகனத்தில் ஏற்றி சென்று திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர். 

click me!