அது எல்லாம் சுத்தப்பொய்... அடித்து சொல்லும் அமைச்சர் சி.வி.சண்முகம்!

By vinoth kumarFirst Published Sep 16, 2018, 1:01 PM IST
Highlights

புழல் மத்திய சிறையில் இருக்கும் கைதிகளுக்கு வசதிகள் செய்து கொடுத்துள்ளதாக வெளியான தகவல் தவறு என்றும், குறிப்பிட்ட கைதிக்க நீதிமன்ற ஆணைப்படி முதல் வகுப்பினருக்கு வழங்க வேண்டிய வசதிகள் தான் செய்து வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

புழல் மத்திய சிறையில் இருக்கும் கைதிகளுக்கு வசதிகள் செய்து கொடுத்துள்ளதாக வெளியான தகவல் தவறு என்றும், குறிப்பிட்ட கைதிக்க நீதிமன்ற ஆணைப்படி முதல் வகுப்பினருக்கு வழங்க வேண்டிய வசதிகள் தான் செய்து வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சொகுசு விடுதியில் இருப்பது போன்று பல்வேறு வசதிகள் புழல் சிறையில் செய்து கொடுக்கப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கைதி ஒருவரும், மதுரை கைதிகள் இருவரும் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இவர்கள் விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளனர். கைதிகளுக்கான ஆடையை அணியாமல், சுற்றுலா செல்வதுபோல் நாகரிக உடைகளை அணிந்தும், காலில் ஷூ அணிந்தும் வலம் வரும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இதனைத் தொடர்ந்து ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, புழல் சிறையில் ஆய்வு செய்தார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகம் கூறியிருந்தார்.

 

டிஐஜி முருகேசன் தலைமையில் நடைபெற்ற சோதனையில் 18 டிவிக்கள், மைக்ரோ ஓவன்கள், செல்போன்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல சிறைகளில் சோதனை நடைபெற்று வருகிறது. சிறை கைதிகளுக்கு வசதிகள் செய்து கொடுத்தது தொடர்பாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். திமுக பொருளாளர் துரைமுருகன், சிறைத்துறை அமைச்சர் நேரடியாக சிறைகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்றார். 

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான், தமிழகத்தின் மற்ற சிறைகளில் பரவாமல் தடுக்க முடியும். சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்ட விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் சட்டத்துறை அமைச்சராக இருந்தபோது சிறைகளில் அவ்வப்போது ஆய்வு நடத்தினேன் என்று கூறியிருந்தார்.

 இந்த நிலையில், அமைச்சர்கள் ஜெயக்குமாரும், சி.வி.சண்முகமும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சட்டத்துறை அமைச்சரிடம், செய்தியாளர்கள், புழல் சிறை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், புழல் சிறை கைதிக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக வெளியான தகவல் தவறு என்றும், குறிப்பட்ட கைதிக்கு நீதிமன்ற ஆணைப்படி முதல் வகுப்பினருக்கு வழங்க வேண்டிய வசதிகள்தான் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முதல் வகுப்பு சிறைக் கைதிகள் குறிப்பிட்ட நேரத்தில் சொந்த ஆடைகளை அணியவும், தொலைக்காட்சி பெட்டிகளைப் பயன்படுத்தவும் அனுமதி இருப்பதாக தெரிவித்தார். செல்போன் கொண்டு செல்வதுதான் குற்றம். அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

click me!