
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியை சேர்ந்தவர் டாக்டர் ரவிசுதன். அதேபகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது மகன் கார்த்திக் சுதான். கடந்த 2016ம் ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். இதில் 1064 மதிப்பெண் பெற்றிருந்தார்.
டாக்டர் ரவிசுதனின் நண்பர், சேலம் ஐந்துசாலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் மூலம் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர், ரவிசுதனுக்கு அறிமுகம் ஆனார். அப்போது, தனது மகன் கார்த்திக் பிளஸ் 2வில் மதிப்பெண் எடுத்தது பற்றி பேசினார்.
அதற்கு ஸ்ரீநாத், என்பவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் கார்த்திக் படிப்பதற்காக எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக அதிக பணம் செலவாகும் எனவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய ரவிசுதன், ரூ.76 லட்சம் வரை சுரேஷ்குமார் மற்றும் ஸ்ரீநாத்திடம் கொடுத்துள்ளார். ஆனால், பணம் வாங்கிய அவர்கள், டாக்டர் சீட் வாங்கி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தனர். இதற்கு ஸ்ரீநாத்தின் மனைவி அகிலா உடந்தையாக இருந்துள்ளார்.
பின்னர், தனது மகனுக்கு எம்பிபிஎஸ் சீட் வேண்டாம். பணத்தை திருப்பி கொடுத்தால் போதும் என ரவிசுதன் கூறினார். ஆனால், பணமும் திருப்பி தரவில்லை. இதனால், அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதுகுறித்து ரவிசுதன் சேலம் எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகார் மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்ற பிரிவு டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், விசாரணை மேற்கொண்டபோது, எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ-76 லட்சத்தை ஸ்ரீநாத் மோசடி செய்தது தெரிந்தது.
மேலும், போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, ரவிசுதனின் மகன் கார்த்திக்குக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக பெறப்பட்டதொகையில் சுரேஷ்குமார் ரூ.11 லட்சம் பெற்றுள்ளார். மீதமுள்ள ரூ.65 லட்சத்தை ஸ்ரீநாத் ஏமாற்றியது தெரியவந்தது.
இதைதொடர்ந்து போலீசார், ஸ்ரீநாத்தின் மனைவி அகிலா மற்றும் சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஸ்ரீநாத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.