
தூத்துக்குடி
தூத்துக்குடியில் விவசாயி தம்பதியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5000 திருடப்பட்டுள்ளது. ஆன்லைனில் இருந்து போன் செய்து ஏ.டி.எம்மின் தகவலை வாங்கி ஆன்லைனிலேயே திருடியுள்ளனர்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஆவல்நத்தத்தை சேர்ந்த விவசாயி ரங்கசாமி (65). இவருடைய மனைவி மாரியம்மாள் (60). இவர்கள் இருவருக்கும் கோவில்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்குகள் உள்ளன.
நேற்று முன்தினம் ரங்கசாமியை, செல்போனில் மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் அவர், ‘கோவில்பட்டி வங்கியின் மண்டல மேலாளர் பேசுகிறேன். ரங்கசாமி, மாரியம்மாளின் வங்கி ஏ.டி.எம். கார்டுகள் கடந்தாண்டுடன் காலாவதியாகி விட்டது. அவற்றை புதுப்பிக்க வேண்டும். எனவே, தற்போது இருவரும் வைத்துள்ள ஏ.டி.எம். கார்டுகளின் வரிசை எண்கள், பாஸ்வேர்டு எண்களை கூறும்படி கேட்டுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பி ரங்கசாமி அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் இருவரின் வங்கி சேமிப்பு கணக்குகளில் இருந்து தலா ரூ.2500 எடுக்கப்பட்டது என்ற தகவல் அவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கசாமி நேற்று கோவில்பட்டியில் உள்ள வங்கியில் முறையிட்டார். உடனே அந்த இருவரின் வங்கி கணக்குகளையும் ஊழியர்கள் ஆய்வு செய்தபோது, ஆன்லைன் மூலம் மர்ம நபர் பணத்தை திருடியுள்ளது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த இருவரின் ஏ.டி.எம் கார்டுகளையும் வங்கி ஊழியர்கள் முடக்கினர். மேலும், இதுபோன்ற மர்ம நபர்களின் செல்போன் அழைப்புகளுக்கு பதில் கூற வேண்டாம் என்று வங்கி தரப்பில், அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதுகுறித்து ரங்கசாமி கொடுத்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.