
சென்னையின் குடிநீர் தேவையை அதிகரிக்கும் நோக்கில், மழை வெள்ள நீரை சேமித்து குடிநீருக்கு பயன்படுத்தும் வகையில், கோவளம் அருகே 4375 ஏக்கர் பரப்பளவில் 1.6 டிஎம்சி கொள்ளளவில் புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை நீர்வளத் துறை கோரியுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.471 கோடியாகும்.
சென்னையின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகரின் அடிப்படையான குடிநீர் தேவையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சென்னையில் தினசரி 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், 350 மில்லியன் லிட்டர் குடிநீர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக பெறப்படுகிறது. எஞ்சிய நீர் ஏரிகளிலிருந்து எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
இருப்பினும், மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்து வருவதால், எதிர்வரும் 2035-ம் ஆண்டில் சென்னையின் தண்ணீர் தேவை 2523 எம்எல்டியாகவும், 2050-ம் ஆண்டில் 3756 எம்எல்டியாகவும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய நீர்த்தேக்கம் ஒன்றை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதன் பின்னணியில், கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னையின் மக்கள்தொகை பெருக்கத்தாலும், அவ்வப்போது ஏற்படும் பருவநிலை மாற்றங்களாலும் உருவாகும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு புதிய நீர்த்தேக்கம் அமைப்பது அவசியமாகிறது.
அந்த வகையில், சென்னைக்கு அருகில் உள்ள கோவளம் உப வடிநிலத்தில் பருவகாலங்களில் கிடைக்கக்கூடிய வெள்ள நீரின் ஒரு பகுதியை, திருப்போரூர் வட்டத்தில் பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் 4375 ஏக்கர் பரப்பளவில் சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 1.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கம், ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் திறன் பெற்று, சென்னையின் 6-வது நீர்த்தேக்கமாக ரூ.350 கோடி செலவில் அமைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து, நீர்த்தேக்கம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை நீர்வளத் துறை தற்போது கோரியுள்ளது. தற்போது இந்த நீர்த்தேக்கத்திற்கான மொத்த செலவு ரூ.471 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் ஆண்டுக்கு கிடைக்கக்கூடிய 170 மில்லியன் லிட்டர் குடிநீரைக் கொண்டு சென்னை வாசிகளின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.