ரூ.321 கோடி மதிப்பில் புறநகர் பேருந்து நிலையம்; ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு உயிர்பெற்றது ஜெ.வின் திட்டம்...

First Published Apr 6, 2018, 6:56 AM IST
Highlights
Rs 321 crore cost suburban bus stand after Five years coming alive Jayalalitha plan


காஞ்சிபுரம்

கிளாம்பாக்கத்தில் ரூ.321 கோடி மதிப்பில் உருவாக்கப்படும் சென்னை புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் இன்னும் ஓரிரு மாதத்தில் தொடங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 30.4.2013 அன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தார். 

அறிவித்து ஐந்து ஆண்டுகளாகியும் இன்னும் அங்கு பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ள இடத்தை துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அதிகாரிகள் பேருந்து நிலையம் எந்த வடிவத்தில் அமைக்கப்படுகிறது என்பது குறித்த வரைபடங்களை துணை முதலமைச்சரிடம் காண்பித்தார்கள். அதனைப் பார்த்த ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளிடம் சில தகவல்களை கேட்டறிந்தார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள், பயணிகள் கூட்டம் அதிமாக இருப்பதை எண்ணி ஒரு புறநகர் பேருந்து நிலையம் நகரின் தென் பகுதியில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் 6 இலட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் ரூ.321 கோடி மதிப்பில் உருவாக்கப்படும் சென்னை புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் இன்னும் ஓரிரு மாதத்தில் தொடங்கப்படும். 

இந்த பேருந்து நிலையத்தின் மூலம் தினந்தோறும் 250 பேருந்துகள் இயக்கப்படுகின்ற சூழல் ஏற்படும். இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும், சென்னையில் உள்ள பிற பகுதிகளுக்கும் பயணிகள் செல்வதற்கு வசதியாக, இதன் அருகிலே 5 ஏக்கர் பரப்பளவில் மாநகர் போக்குவரத்து பேருந்து நிலையம் அமைக்கப்படும். 

தென் பகுதியில் இருந்து வருகின்றவர்கள் இங்கு இறங்கி சென்னை மாநகர் பகுதிக்கு செல்வதற்கு வசதிகள் செய்யப்படும், மிகப் பெரிய பேருந்து நிலையமாக அமைய இருக்கின்ற கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பயணிகள் சிரமமின்றி வந்து செல்ல அனைத்து வசதிகளும் செய்யப்பட இருக்கிறது.

இந்த பேருந்து நிலையத்தில் தங்கும் வசதி, பயணிகள் ஓய்வு அறை, சிறிய அளவில் மருத்துவமனை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் உருவாக்கப்படும்.

இந்த பேருந்து நிலையத்தின் மதிப்பீடுகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இப்பணி முடிந்தவுடன் ஓரிரு மாதத்தில் புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகளில் இப்பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு உறுதியாக கொண்டுவரப்படும்.

இன்று (நேற்று) 98 சதவீதம் பேருந்துகள் காலையில் இருந்து வழக்கம்போல ஓடுகின்றன. ஒரு அரசு செய்ய வேண்டிய கடமைகளை பொறுப்புடன் உணர்ந்து தமிழக அரசு அதை சரியாக செய்து வருகிறது. 

அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுத்ததின் காரணமாக வருகின்ற 9-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு நல்ல முடிவு ஏற்படும் என்று தலைமை நீதிபதி சொல்லியிருக்கிறார். அரசியல் காரணத்திற்காக சில கட்சிகள் கபட நாடகம் ஆடுகின்றன" என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் ராஜேஷ் லக்கானி, முதன்மை செயல் அலுவலர் மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர். 

click me!