
நாமக்கல்
நாமக்கல்லில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்த தனியார் நிறுவனங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் ரூ.3 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். கூட்டம் முடிந்த பிறகு ஆட்சியர் ஆசியா மரியம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், “நாமக்கல் மாவட்டத்தில் மழைநீர் தேங்கும் வாய்ப்புகள் உள்ளப் பகுதிகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் எனவும், மழைநீர் தேங்காமல் பாதுகாப்பதோடு சுற்றுபுறத்தினையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி தனியார் நிறுவனங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த சுமார் 2200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் அறிக்கை அளிக்கப்பட்டு, சரிவர நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவர்களுக்கு சுமார் ரூ.3 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிப்பது என்பது முக்கிய நோக்கம் அல்ல. காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை. அரசு மருத்துவமனைக்கு சென்று இலவசமாக சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, நாமக்கல் துணை ஆட்சியர் கிராந்தி குமார், திருச்செங்கோடு உதவி ஆட்சியர் பாஸ்கரன், முதன்மை கல்வி அலுவலர் உஷா, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மருத்துவர் ரமேஷ்குமார், நாமக்கல் தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.