நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை; பழைய 500 ரூபாயை வைத்துவிட்டு நகை, ரொக்கம் அபேஸ்...

First Published Apr 10, 2018, 7:44 AM IST
Highlights
robbers theft in jewel shop owner house kept old 500 rupees and jewelry and cash theft


அரியலூர்

அரியலூரில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளை அப்படியே வைத்துவிட்டு 16 சவரன் நகைகள், ரூ.3 இலட்சத்தை திருடி சென்றனர். 

அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் விசாலாட்சி நகரைச் சேர்ந்தவர் சுபா சரவணன் (48). இவர், செயங்கொண்டம் கடைவீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள். இருவரும் வெளியூரில் படித்து வருகின்றனர். கணவன் - மனைவி மட்டுமே வீட்டில் வசித்து வருகின்றனர். 

சுபா சரவணன் தனது மனைவி தேவியை (43) அழைத்துக் கொண்டு நாள்தோறும் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதேபோல நேற்றும் காலை 6 மணிக்கு கணவன் - மனைவி இருவரும் நடைபயிற்சிக்குச் செல்ல தயாரானார்கள். 

தேவி தனது கழுத்தில் அணிந்திருந்த நகையை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, வீட்டின் பின்பக்க கதவை தாழ்பாள் போட்டார். பின்னர் முன்பக்க கதவை பூட்டாமல் சாத்திவிட்டு, இரும்பு கேட்டை மட்டும் பூட்டுபோட்டு பூட்டிவிட்டு இருவரும் நடைபயிற்சிக்கு சென்றனர்.

பின்னர் இருவரும் நடைபயிற்சியை முடித்து கொண்டு 7 மணியளவில் வீட்டிற்கு திரும்பினர். வீட்டிற்கு வந்துபார்த்தபோது வீட்டின் முன்பக்க இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுபா சரவணனும், அவரது மனைவி தேவியும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். 

அப்போது, பீரோவை பார்த்த போது, பீரோவும் உடைக்கப்பட்டு துணிகள் கலைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவிலிருந்த 16 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 இலட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

இதில் பீரோவில் இருந்த பழைய ரூ.500 நோட்டுகளை மட்டும் மர்ம நபர்கள் எடுக்காமல் விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து, செயங்கொண்டம் காவல் நிலையத்தில் சுபா சரவணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு செயங்கொண்டம் துணை காவல்  கண்காணிப்பாளர் கென்னடி, காவல் ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

பின்னர், காவல் மோப்ப நாய் டிக்ஸி மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தினர். நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நகை - பணம் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து நகை - பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!