
திருவள்ளூர்
திருவள்ளூரில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 10 சவரன் நகையை கொள்ளை அடித்துச் சென்றது தொடர்பாக காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தை அடுத்த பால்பண்ணை மாத்தூர் எம்எம்டிஏ 2-வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நர்மதா (24). இவர்களது குழந்தை அஷ்வந்த் (2).
நேற்று முன்தினம் இரவு நர்மதா குழந்தை அஷ்வந்துடன் வீட்டைப் பூட்டாமல், தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, வீட்டினுள்ளே நுழைந்த மர்ம நபர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். பின்னர், அவர்களிடம் இருந்து 10 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.
பின்னர், வீட்டுக்கு வந்த மணிகண்டனிடம் நடந்தை விவரித்தார் நர்மதா. அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மணிகண்டன். இதுகுறித்து வழக்குப் பதிந்த காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.