
பட்டிவீரன்பட்டி
பட்டிவீரன்பட்டி அருகே, இராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.12 ஆயிரம் பணம் திருடு போனது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு ஊராட்சி ஒட்டுப்பட்டியை சேர்ந்தவர் அனந்தநாராயணன். இராஜஸ்தான் மாநிலத்தில் இராணுவ வீரராக உள்ளார். இவருடைய மனைவி நாகப்பிரியா. இவர்களது மகன் அபினேஷ். ஒட்டுப்பட்டியில் வசிக்கும் மாமியாரான மீனாவுடன், நாகப்பிரியாவும், அபினேசும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வியாழக்கிழமை அபினேசுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து வீட்டை பூட்டிவிட்டு அபினேசை திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நாகப்பிரியாவும், மீனாவும் அழைத்துச் சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.அடுத்த நாள் காலையில் மீனாவின் உறவினர் ஒருவர் அவர்களுக்கு தேவையான பொருட்களை எடுப்பதற்காக இராணுவ வீரரின் வீட்டிற்குச் சென்றார். அப்போது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை பார்த்தார். தொடர்ந்து மீனாவுக்கு அவர் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து மீனா வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதையும், பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதையும் பார்வையிட்டனர். இதற்கிடையே மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம்பிடித்துவிட்டு சாலையில் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் பிடிக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், திருடர்களைப் பிடிக்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.