அடுக்குமாடி வீடுகள் கட்ட எதிர்ப்பு - வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள் மீண்டும் போராட்டம்...

First Published Mar 14, 2018, 10:35 AM IST
Highlights
Residents of housing board people protest again for not to build apartment buildings ...


கரூர்

தங்கள் பகுதியில் அடுக்குமாடி வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கரூர் மாவட்டம், எஸ்.வெள்ளாளப்பட்டியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. 

இந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் முன்பு பூங்கா மற்றும் பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாகவும், அதற்கான பூமி பூஜை பணியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. 

அப்போது வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பூமி பூஜை போடவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், அதிகாரிகளும் திரும்பி சென்றனர். 

அதன்பின் நில அளவையர்களும் நிலத்தை அளக்க வந்தபோது அவர்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி அடிக்கடி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர்.

இந்த நிலையில், குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை பூமி பூஜையிட வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பூஜை நடத்த கூடாது, வேறு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமாறு கூறி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்தில் பெண்கள் அனைவரும் ஒன்றாக ஒரு இடத்திலும், ஆண்கள் மற்றொரு இடத்திலும் அமர்ந்திருந்தனர். இதனால், அதிகாரிகள் செய்வதறியாமல் திணறினர். 

இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்து விசாரித்தனர். மேலும், உதவி ஆட்சியர் சரவணமூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். உதவி ஆட்சியரும் விரைந்து வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது மக்கள் தரப்பில், “வீட்டு வசதி வாரியம் வீடுகள் விற்கும்போது எங்களுக்கு பொதுப் பயன்பாட்டிற்கு என்று ஒதுக்கிய இடத்திலும், பூங்கா மற்றும் கடைகள் அமைய உள்ள இடத்திலும் தற்போது குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்ட முயற்சிக்கிறது. 

வேறு இடத்தில் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இந்த பகுதியில் சாலை, குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. இதனை நிறைவேற்ற வேண்டும்” என்றனர். 

இது தொடர்பாக ஒரு அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று உதவி ஆட்சியர் தெரிவித்தார். மேலும், இதில் மக்கள் சார்பிலும், வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார். இதனை ஏற்று மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

click me!