
திருப்பூர்
ஒட்டுமொத்த எலாஸ்டிக் துறைக்கும் ஒரே விதமான 5 சதவீத வரியை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிற்கு திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
ஜி.எஸ்.டி வரி நாடு முழுவதும் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த ஜி.எஸ்.டி. வரியால் தொழில்துறையினர் பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு எலாஸ்டிக் உற்பத்தியாளர்களையும் வெகுவாக பாதிப்படைய செய்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கோவிந்தசாமி அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.
அதில், “நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு முறையை நாங்கள் வரவேற்கிறோம். அதேசமயம் பின்னலாடை துறையின் உள்ளாடை உற்பத்தியில் மூலபொருளான எலாஸ்டிக் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இந்த எலாஸ்டிக் ‘குரோசெட்’ மற்றும் ‘வோவன்’ என இரு வகைப்படுத்தப்படுகிறது. இந்த இரு வகை எலாஸ்டிக்கும் ஒரே நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படுவதுடன் ஒரே பின்னலாடை நிறுவனத்தின் பயன்பாட்டிற்கும் கொண்டுச் செல்லப்படுகிறது. இதற்கான மூலப்பொருளாக ரப்பர் மற்றும் நூலும் ஒரே வகையைச் சேர்ந்தது.
ஆனால் ஜி.எஸ்.டி.ல் குரோசெட் எலாஸ்டிக்கு 5 சதவீதமும், ஓவன் எலாஸ்டிக்குக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த இரு எலாஸ்டிக்கை உபயோகப்படுத்தும் உள்ளிடை பிரிவானது ஒரே விதமான வரிவிதிப்பை பெறுகிறது. எனவ, பின்னலாடைத் துறையினருக்கு எலாஸ்டிக் விலை உயர்வு குறித்த குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இரு எலாஸ்டிக்கை உற்பத்திச் செய்யும் நிறுவனமும் மற்றும் ஓவன் எலாஸ்டிக்கை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் இந்த வரி விதிப்பால் பாதிக்கப்படும்.
எனவே, ஒட்டுமொத்த எலாஸ்டிக் துறைக்கும் ஒரே விதமான 5 சதவீத வரியை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.