
கன்னியாகுமரி
ஆய்வுக்குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் காணாமல்போன 149 மீனவர்களின் விவரம் குறித்து உறுதி செய்யப்பட்டபின்னர் நிவாரண தொகை உறுதியாக வழங்கப்படும் என்று மீன்வளத்துறை இயக்குனர் தண்டபாணி தெரிவித்தார்.
ஓகி புயலால் காணாமல் போன 149 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப் பட்டு வரும் கள ஆய்வுப் பணியை மீன்வளத்துறை இயக்குனர் தண்டபாணி, ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அதன்பின்னர் மீன்வளத்துறை இயக்குனர் தண்டபாணி, "ஓகி புயலில் சிக்கி காணாமல்போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 12-ஆம் தேதி அன்று அரசாணை வெளியிட்டது.
அதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தாசில்தார் தலைமையில், தாலுகா அளவில் மீன்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மீனவ கிராமத்தின் பிரதிநிதிகள் மூன்று பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழு காணாமல் போன மீனவர்களின் விவரத்தை உறுதி செய்யும் கள ஆய்வுப் பணியை முதல் நீரோடி, வள்ளவிளை, சின்னதுறை, பூத்துறை, மார்த்தாண்டன்துறை உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கியுள்ளது.
இந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் காணாமல்போன 149 மீனவர்களின் விவரம் குறித்து உறுதி செய்யப்பட்டபின், மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு அடுத்த நடவடிக்கையாக நிவாரண தொகை வழங்கப்படும்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மீன்வளத்துறை இணை இயக்குனர் (சென்னை) ஜூடு ஆம்ஸ்ட்ராங், மீன்வளத்துறை துணை இயக்குனர் லாமேக் ஜெயகுமார், விளவங்கோடு தாசில்தார் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.