
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை நீக்கி அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என தமிழக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதையடுத்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தினர். குறிப்பாக கல்லூரி மாணவர்களின் போராட்டம்,உலகையே திரும்பி பார்க்க செய்தது.
இதையடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கான வரைவு மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு முடிந்துவிட்டது. இதை தொடர்ந்து, வரும் பிப்ரவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் உள்ளனர்.
இந்நிலையில், உடுமலை அருகே உள்ள சின்னவீரம் பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்த ரேக்ளா பந்தய போட்டிய காண்பதற்கு, அந்த கிராமத்து மக்கள் யாரும் செல்லவில்லை. இதனால், அதிமுகவினர் மட்டும் அதிகளவில் கண்டு ரசித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பந்தயத்துக்கு,சின்னவீரம்பட்டி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
இதுகுறித்து மேற்கண்ட பகுதி மக்கள் கூறுகையில், தமிழ் பாரம்பரியத்தை காப்பாற்ற பாடுபடும் சின்னவீரம்பட்டி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் எந்த போட்டியும் நடத்த வில்லை. இந்த ரேக்ளா பந்தயத்துக்கும், சின்னவீரம்பட்டி கிராமத்தினருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
இது முழுக்க, முழுக்க ஆளுங்கட்சியின் அரசியல் துஷ்பிரயோகம். இந்த பந்தயத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த 3 ரேக்ளா வண்டிகள் மட்டுமே பங்கேற்றன. இதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமின்றி கண்டன போஸ்டர்களை அனைத்து பகுதியிலும் ஒட்டியுள்ளோம். இந்த போஸ்டர்கள் சின்னவீரம்பட்டி மட்டுமின்றி உடுமலை உள்ளிட்ட பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது என்றனர்.