
கடந்த ஆண்டு ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அதை தவிர்த்து மற்ற பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தினை பல்வேறு அரசியல் மற்றும் அமைப்பு தலைவர்கள் கண்டித்துள்ளனர். பாலைப் போல் அல்லாமல் ஆவினின் மற்ற பொருட்களை குறைந்த மக்களே பயன்டுத்துவதால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று நுகர்வோர் சங்கத்தினர் விளக்கமளித்துள்ளனர்.
இந்நிலையில் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு முக்கியாமான காரணம் என்னவென்பதை ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் நெய், பாதாம் பால் பவுடர், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஆவின் நெய் கிலோ ஒன்றுக்கு ரூ. 515-க்கு விற்பனையாகி வந்த நிலையில், ரூ. 20 அதிகரிக்கப்பட்டு இனி ரூ. 535-க்கு விற்பனையாகும் என்றும் இதேபோன்று 500 மில்லி தயிரின் விலை ரூ. 3 அதிகரிக்கப்பட்டு இனி ரூ. 30-க்கு விற்பனையாகும் என்றும் அறிவிக்கப்பட்டும் அமலுக்கு வந்துள்ளது.
தற்போதைய விலை உயர்வை கணக்கிட்டு பார்த்தால், ஆவின் நெய் லிட்டருக்கு 30.00ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நெய் விலையைக் காட்டிலும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் நெய்யின் விலை அதிகமாகும். உதாரணத்திற்கு, திருமலா, ஜி.ஆர்.பி., ஹட்சன் நிறுவனங்கள் நெய்யை கிலோ ஒன்றுக்கு ரூ. 650 - 695 -க்கு விற்பனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பாதாம் பால் பவுடர் 1 கிலோ 100.00ரூபாய், தயிர் லிட்டருக்கு 6.00ரூபாய் என கடுமையாக விற்பனை விலை உயர்த்தப்பட்டு புதிய விற்பனை விலை மார்ச் 4 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.அதில், பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தை கூறி கடந்த வாரம் தனியார் நிறுவனங்கள் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்திய நிலையில் தற்போது ஆவின் பால் பொருட்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் அதிர்ச்சி.. பிரியாணி சாப்பிட்ட தகராறில் இளைஞர் தற்கொலை..!
இதனிடையே இன்னும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக, கள்ளச் சந்தையில் ஆவின் நெய் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.விலை குறைவாக இருப்பதால், ஆவின் நெய்யை வாங்கி, அதை மாற்று நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யும் ஆபத்தும் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற கள்ளசந்தையில் விற்பனை செய்யும் முறைகேடுகளை தவிர்ப்பதற்கு அதிக சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.
இருப்பினும், பால் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்ந்திருப்பதும் விலை உயர்வுக்கு ஓர் காரணமாக கூறப்படுகிறது.சில்லறை விற்பனையில் ஆவின் பொருட்கள் ஒரு விலைக்கும், ஆன்லைன் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் இன்னொரு விலைக்கும் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.