ஓபிஎஸ், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழ்நாட்டு அரசியலில் தேனி என்றாலே உடனே நினைவுக்கு வருவது ஓபிஎஸ்தான். அந்த அளவுக்கு அப்பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருப்பவர் ஓபிஎஸ். ஆனால், தேனியில் ஓபிஎஸ்சுக்கே டஃப் கொடுப்பவர் ங்க தமிழ்செல்வன். பதவிக்காக எதையும் செய்யக் கூடியவர் ஓபிஎஸ் என தங்க தமிழ்செல்வனும், அவர் தங்கமல்ல தகரம் என ஓபிஎஸ்ஸும் கடுமையாக விமர்சித்துக் கொள்ளும் வகையில், அரசியலில் எதிரும்புதிருமாக இருப்பவர்கள்தான் அவர்கள் இருவரும்.
ஓபிஎஸ், தங்க தமிழ்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்த காலம் தொட்டே அவர்கள் இருவருக்குள்ளும் உரசல்கள் இருந்தன. அதிமுகவில் மூன்று முறை எம்.எல்.ஏ., ஒரு முறை ராஜ்யசபா எம்.பி., சுமார் 10ஆண்டுகளுக்கும் மேல் மாவட்ட செயலாளர் என ஓபிஎஸ்சுக்கு இணையாக தங்க தமிழ்செல்வனை கோலோச்ச வைத்தவர்தான் ஜெயலலிதா. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காகத் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அவரது இமேஜ் உயர்ந்தது. ஆனால், அமைச்சர் உள்ளிட்ட பெரிய பதவிகள் தங்க தமிழ்செல்வனுக்கு கிடைக்கவிடாமல் ஓபிஎஸ் பார்த்துக் கொண்டதாகவும் அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுவர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டிடிவி அணியில் பயணித்த தங்க தமிழ்செல்வன், மனக்கசப்பு காரணமாக திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவில் மாநில அளவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தேனி வடக்கு திமுக மாவட்ட செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
திமுகவில் சேர்ந்த பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் மீதும் அவருடைய மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் தங்க தமிழ்செல்வன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ்சை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பை அவருக்கு ஸ்டாலின் ஏற்படுத்தித் தந்தார். ஓபிஎஸ்சை எப்படியாவது தோல்வியடைய செய்ய வேண்டும் என கடுமையாக வேலை பார்த்தாலும், இறுதியில் தங்க தமிழ்செல்வனுக்கு தோல்வியே கிட்டியது.
அந்த தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கும் என்று நம்பினார். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து, திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், ஓபிஎஸ்சை ஓரங்கட்டும் வகையில் மீண்டும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு அவர் செல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த தகவல்களுக்கு தங்கத்தின் ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். இருப்பினும், கட்சிகளை தாண்டி தங்க தமிழ்செல்வத்தின் நடவடிக்கைகள் எப்போதும் ஓபிஎஸ்சுக்கு எதிரகவே இருந்துள்ளது.
இந்த நிலையில், ஓபிஎஸ், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் சந்தித்துள்ளனர். அவர்களது சந்திப்பு தேனியை தாண்டி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை அவருடைய வீட்டிற்கு சென்று நேரடியாக சந்தித்த தங்க தமிழ்செல்வன், தன்னுடைய இல்ல திருமண விழாவுக்கான அழைப்பிதழை கொடுத்து அழைத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமமுகவில் இருந்தபோது, தங்கம்... தங்கம்.. என சொல்லி தன் அருகிலேயே வைத்துக் கொண்டவர் டிடிவி தினகரன். தற்போது, ஓபிஎஸ்சும், டிடிவியும் வெளிப்படையாக அரசியலில் இணைந்துள்ளதால், மீண்டும் அவர்களது அணிக்கு செல்ல தங்கம் தமிழ்செல்வன் தூபம் போடுகிறாரா என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
அதிமுகவில் இருந்தபோதும் சரி, அமமுகவில் இருந்தபோதும் சரி எப்போதும் லைம் லட்டிலேயே இருந்தவர் தங்க தமிழ்செல்வன். ஆனால், திமுகவுக்கு சென்ற பின்னர் அவரை பார்ப்பதே கடினமாக உள்ளது. செந்தில் பாலாஜியுடனான நெருக்கம் காரணமாகவே திமுகவுக்கு வந்தவர் தங்க தமிழ்செல்வன். ஆனால், செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்குகளை சந்தித்து வருவதாலும், திமுகவில் தனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என தங்க தமிழ்செல்வன் கருதுவதாக வெளியாகும் தகவல்களும் இயல்பாகவே இந்த பேச்சுகளை எழுப்பியுள்ளன.
ஆனால், ஒரே மாவட்டத்துக்காரர்கள், ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மரியாதை நிமித்தமாக சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டதே தவிர, இதில் அரசியல் எதுவும் இல்லை. திமுக தலைமை மீது அதிருப்தி இல்லை என்கிறனர் தங்கத்தின் ஆதரவாளர்கள்.