வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை!

By vinoth kumarFirst Published Sep 25, 2018, 5:26 PM IST
Highlights

சந்தன கடத்தல் வீரப்பனால், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

சந்தன கடத்தல் வீரப்பனால், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 30-07-2000 ஆம் ஆண்டு தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் உள்ள அவரது பன்ணை வீட்டில் தங்கியிருந்த போது வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார். 

108 நாட்கள் பிணைக் கைதியாக நடிகர் ராஜ்குமாரை வைத்திருந்த வீரப்பன் பின்னர் ராஜ்குமாரை விடுவித்தான். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தனர். வழக்கானது கடந்த 18 வருடம் 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை 10 நீதிபதிகள் விசாரித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 

அப்போது இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 14 பேரில் கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன் ஆகிய 5 பேர் நீதிபதி மணி முன்பு ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி 25 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என்றார். மேலும், அன்றறைய தினம் வழக்கில் சம்பந்தப்பட்ட 14 பேரில் வீரப்பன் சேத்துக்குளி கோவிந்தன், சந்தனகவுடா ஆகியோர் உட்பட நான்கு பேர் காவல்துறையினர் என்கவுண்டரில் பலியானதால் மீதம் உள்ள 10 பேரில் ரமேஸ் என்பவர் தலைமறைவாகியுள்ளதால் மற்ற 9 பேரும் தவறாமல் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

இந்த வழக்கின் வாதிகளான ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி பர்வதம்மாள் ஆகியோர் வழக்கு விசாரணையில் உள்ளபோதே உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் சாட்சிக்கு நீதிமன்றம் வரவில்லை. இந்த வழக்கில் 47 பேர் சாட்சிளித்துள்ளனர். கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினா் குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது சரிவர குற்றச்சாட்டை நிரூபிக்க தவறியதாக கூறி அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி மணி தீர்ப்பு வழங்கினார். 

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுவிக்கப்பட்டதற்கு பழ.நெடுமாறன் வரவேற்றுள்ளார். 18 ஆண்டுகளாக மன உளைச்சலுக்கு ஆளான 9 பேருக்கும், அரசு முன் வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 18 ஆண்டு காலத்தற்கு பிறகு நீதி நிலை நாட்டப்பட்டிருப்பதாகவும் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

click me!