கணவருடன் இருக்க முடியல.. பிரியங்கா காந்தி சொன்னது இதுதான் - கண் கலங்கிய நளினி !

By Raghupati R  |  First Published Nov 13, 2022, 9:03 PM IST

தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்கள் மீது அன்பை பொழிந்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நளினி.


கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ல் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு 1998-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

இதையடுத்து, அனைவரும் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டனர். தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தும், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரின் தூக்குதண்டனை ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது. இதில், நளினியின் தூக்கு தண்டனை 2000-ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..2 கோடிக்கு கிராமம் விற்பனை.! நல்ல ஆஃபர் யார் வேணாலும் வாங்கலாம் !! இவ்வளவு வசதிகள் இருக்கா ?

2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிடப்பட்டது.உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன் கடந்த மே மாதம் விடுதலை செய்யப்பட்ட நிலையில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் உத்தரவிட்டனர். 

இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பரோலில் இருந்தநளினி, போலீஸார் பாதுகாப்புடன் வேலூர் பெண்கள் தனிச்சிறைக்கு நேற்று மாலை 4 மணியளவில் திரும்பினார். அங்கு விடுதலைக்கான ஆவணங்களில் கையெழுத்திட்ட நளினி, 30 ஆண்டுகளுக்கு மேலானசிறை வாழ்க்கையை முடித்துக்கொண்டு வெளியே வந்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் நளினி. ‘தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்கள் மீது அன்பை பொழிந்த தமிழக மக்களுக்கு நன்றி. ஒவ்வொரு தலைவர்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கும், எனது கணவர் முருகனும் பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது. நாங்கள் இந்தியர்கள்.

மீண்டும் இலங்கை செல்லும் எண்ணம் இல்லை. அகதிகள் முகாமில் உள்ள கணவர் முருகனை, மகளுடன் சேர்த்து வைக்க வேண்டும். சிறையில் இருந்தாலும் மனதளவில் கணவர் மற்றும் மகளுடன்தான் இருந்தேன். எப்போதும் அவர்களை தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன். எங்களின் விடுதலைக்கு உயிரை கொடுத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். விரைவில் சிறையிலிருந்து வெளியே சென்று விடுவோம் என்று எண்ணிய நேரத்தில் தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வந்தது.

இதையும் படிங்க..பாஜகவில் சேரப் போகும் முக்கிய தலைகள்.. திமுக எங்கள் எதிரி தான், ஆனால் ? அண்ணாமலை சொன்ன சீக்ரெட் !

தீர்ப்பு வந்தவுடன் வாழ்க்கையை முடித்து கொள்ள வேண்டும் என்று பல முறை நினைத்துள்ளேன்.  பிரியங்கா காந்தி சிறையில் என்னை சந்தித்த போது அவரது தந்தை இறப்பின் காயம் குறித்து மனம் விட்டு பேசி கண் கலங்கினார். ராஜீவ் காந்தி குடும்பத்தினரை பார்ப்பதற்கு எனக்கு தயக்கமாக உள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்றதாக மட்டுமே என் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டேன். ஆனால் கைதான முதல் நாளிலிருந்தே தூக்கு தண்டனை கைதி போலவே நடத்தப்பட்டேன். அனைவருக்கும் தூக்கு தண்டனை ரத்தாக வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது.

பிரதமரின் இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம். பிரதமர் குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் நான் இல்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சிறையில் இருந்த 32 ஆண்டுகளில் நான் எந்த தவறும் செய்ததில்லை. சிறையில் இருந்த நேரத்தில் பல தடைகளுடன் 6 ஆண்டுகள் உயர்கல்வி படித்து முடித்தேன். சிறைவாசம் பெரிய பல்கலைக்கழகம். நிறைய விஷயங்கள் கற்று கொண்டேன். நான் விடுதலையானதற்கு, சிறை காவலர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். விடுதலைக்கு உதவிய முதல்வர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

இதையும் படிங்க..அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம்

click me!