பெரிய கோயிலை அடைந்த ராசராச சோழன், உலோகமா தேவி; மக்கள் உற்சாக வரவேற்பு; கும்ப மரியாதையுடன் சிறப்பு வழிபாடு...

First Published Jun 2, 2018, 9:14 AM IST
Highlights
Rajaraja Chola and logama devi statue came to peruvudaiyar temple People welcomed Special worship


தஞ்சாவூர்
 
குஜராத்தில் இருந்து மீட்கப்பட்டு தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட ராசராச சோழன், உலோகமா தேவி சிலைகளுக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.  பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பரிவட்டம் கட்டி, கும்ப மரியாதையுடன் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்பட்டன.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலை கட்டிய ராசராசசோழன், அவரது பட்டத்தரசியான உலோகமா தேவி ஆகியோருக்கு அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போதே ராசராசனின் படைத் தளபதியான சேனாதிபதி மும்முடிச்சோழ பிரம்மராயன் என்பவரால் அவர்களுக்கு ஐம்பொன்னால் சிலைகள் வடிவமைக்கப்பட்டது.

இந்த இரண்டு சிலைகளும் தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் மூலவரான பெருவுடையாரை நோக்கி வணங்குவது போல வைக்கப்பட்டிருந்தது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்த இந்த இரண்டு சிலைகளும் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது. இந்த சிலைகள் கோயிலின் உயர் நிலை நிர்வாகிகள் சிலரால் திருடப்பட்டு தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள சருக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ்பகதூர் சீனிவாச கோபாலச்சாரி என்பவர் மூலம் சென்னையில் கௌதம் சாராபாய் என்பவருக்கு பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

இந்த சிலைகள் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சாராபாய் ஃபௌண்டேசன் காலிகோ அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்தது.

இந்த சிலைகளுக்கு பதிலாக வேறு சிலைகள் தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. குஜராத்தில் உள்ள ராசராச சோழன்,  உலோகமா தேவி சிலைகளை மீட்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக தஞ்சாவூரில் உள்ள பல்வேறு அமைப்புகளும், மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். 

ஆனால், தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் இருந்து சிலைகள் காணாமல் போனது தொடர்பாக எந்த புகாரும் காவல் நிலையத்தில் பதிவாகாமல் இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் காணாமல்போன சிலைகளை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலாளர்கள் களமிறங்கினர். 

ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலாளர்கள் தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு கடந்த மார்ச் மாதம் வந்து சிலைகள் தொடர்பாக ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 29-ஆம் தேதி தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிலைகள் மாயமானது தொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். மேலும், ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் குஜராத் மாநிலத்துக்கு சென்று அங்கிருந்து ராசராச சோழன், உலோகமா தேவி ஆகியோரின் சிலைகளை மீட்டுக்கொண்டு இரயில் மூலம் சென்னை வந்தனர்.

சென்னையில் இருந்து நேற்று காலை கார் மூலம் இந்த சிலைகள், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது. 

கும்பகோணத்துக்கு ராசராச சோழன், உலோகமா தேவி சிலைகள் கொண்டு வரப்படுவது குறித்து வந்த தகவலை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி மேற்பார்வையில் ஏராளமான காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.

சென்னையில் இருந்து சிலைகளுடன் புறப்பட்ட கார் நேற்று மதியம் 1 மணிக்கு கும்பகோணம் நீதிமன்றம் அருகே உள்ள பக்தபுரி தெரு ரௌண்டானா பகுதிக்கு வந்தது. அப்போது கும்பகோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு, தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை, 

ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம், விசுவ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் மக்கள் சாலையில் திரண்டு நின்று சிலைகளுக்கு வரவேற்பு அளித்தனர். சிவனடியார்கள் சிவபூத இசைக்கருவிகளை இசைத்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் காவலாளர்கள் அந்த இரண்டு சிலைகளையும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஒப்படைத்தனர். 

சிலைகளை பார்வையிட்ட நீதிபதி, அந்த சிலைகளை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்படி இரண்டு சிலைகளும் அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டு சிலைகளும், திருவையாறுக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு உலோகமா தேவி கட்டிய வடகைலாயம் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் தஞ்சை பெரிய கோயிலுக்கு சிலைகள் கொண்டுவரப்பட்டன.

தஞ்சை பெரிய கோயில் மராட்டா நுழைவாயில் முன்பாக சிலைகளுக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அங்கிருந்து பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ராசராசசோழன் நுழைவுவாயில் அருகே பரிவட்டம் கட்டப்பட்டு கும்ப மரியாதையுடன் சிலைகள் கோவிலின் உள்ளே, பெருவுடையார் சன்னதிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.

பின்னர் ராசராசசோழன், உலோகமா தேவி சிலைகள் கோவிலின் உள்ளே தெற்கு பகுதியில், பெருவுடையார் சன்னதியை பார்த்தபடி மேற்கு நோக்கி தியாகராஜர் மண்டபம் எதிரே வைக்கப்பட்டது. 

அப்போது, ராசராசசோழன், உலோகமா தேவி சிலைகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிலைகள் வைக்கப்பட்ட பின் அங்கு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், ஆர்.டி.ஓ. சுரேஷ், குடவாயில் பாலசுப்பிரமணியம், 

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

click me!