
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மிதமான மழையில் மக்கள் நனைந்து உற்சாகம் அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போன நிலையில் தமிழகம் எங்கும் வறட்சி நிலவுகிறது. ஏரிகள், குளங்கள் என அனைத்தும் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பெண்கள் குடங்களுடன் சாலைகளில் அலைந்த திரிகின்றனர். பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழ்நிலையில் மழை பெய்தால் எப்படி இருக்கும்? என பொது மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் மழையால் குடிநீர் தட்டுப்பாடு தீரும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரையில் பகல் வேளையில் வெயில் அடித்தாலும் மாலையில் மிதமான மழை பெய்து வருகிறது.
கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் சீசனை அனுபவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம், நெய்வேலி, கமுதி, முதுகுளத்தூர், காரைக்கால் என பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.
இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மார்ச் மாதத்தில் பெய்யும் மழை வரலாற்றில் இடம் பெறும் என வெதர்மேன் அறிவித்துள்ள நிலையில் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் தமிழ மக்கள்.