
தென்மேற்கு வங்ககடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுபகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு, இன்று காலை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை பகுதியை கடந்து நாளை (30 ஆம் தேதி) குமரி கடல் பகுதியில் நிலைக்கொள்ளக்கூடும். இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களில் அதாவது 29 மற்றும் 30 தேதிகளில் தென் தமிழகம் மற்றும் தஞ்சை, திருவாருர், புதுக்கோட்டை,நாகை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
கன மழை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களில் நெல்லை, குமரி , தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம். விருதுநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும். வட தமிழகம் பொறுத்தவரை தஞ்சை, திருவாரூர் ,நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை ஒட்டியுள்ள கடற் பகுதியில் 50 முதல் 60 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடல் சீற்றத்தோடு காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் வரும் இரு தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரம் வரை தமிழகம் முழுவதும் பெய்த மழை அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
நன்னிலம் - 7 செ. மீ.
ராமநாதபுரம் - 6 செ. மீ.
தரங்கம்பாடி - 5 செ. மீ.
மயிலாடுதுறை - 4 செ. மீ.
கொடவாசல், சீர்காழி, பாம்பன், நீடாமங்கலம், காரைக்கால் - தலா 3 செ.மீ
வேதாரண்யம், பேச்சிப்பாறை, கும்பகோணம், பாபநாசம் (நெல்லை), திருவாரூர், திருவிடைமருதூர் - தலா 2 செ. மீ
மன்னார்குடி, பட்டுக்கோட்டை, வல்லம், தஞ்சாவூர், சிதம்பரம், ஆணைக்காரன்சத்திரம், திருத்துறைப்பூண்டி - தலா 1 செ. மீ